2018, 2019 ஆம் ஆண்டுக்கான "பிக்பாஷ்" இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி வெற்றியீட்டி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. 

8 ஆவது பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகி, அவுஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. 

8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்சும், கிளைன் மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்சும் இறுதிப்போட்டியில் மோதின.

நேற்றைய தினம் மெல்போர்னில் இடம்பெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியமெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி நிர்ணியிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்கள‍ை பெற்றது.

மார்க்கஸ் ஹரீஸ் 12 ஓட்டங்களையும், பின்ஞ் 13 ஓட்டத்தையும், ஷெம் ஹார்பர் 6 ஓட்டத்தையும், கெம்ரோன் வைட் 12 ஓட்டத்தையும், மெக்கென்சி ஹார்வி 14 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், டொம் கூப்பர் 43 ஓட்டத்துடனும், டேனியல் கிறிஸ்டியன் 38 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இதையடுத்து 146 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து, 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி சார்பில் பென் டங்க் 57 ஓட்டத்தையும், மார்கஸ் ஸ்டோனெனிஸ் 39 ஓட்டத்தையும், பீட்டர் ஹான்சாம்கோப் டக்கவுட் முறையிலும், மெக்ஸ்வேல் ஒரு ஓட்டத்துடனும், நிகி மாடிசன் 6 ஓட்டத்துடனும், சேப் கோட்ச் 2 ஓட்டத்துடனும், பிராவோ 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க சம்பா 17 ஓட்டத்துடனும், ஜெக்சன் பேர்ட் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

இதனால் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி 13 ஓட்டத்தினால் வெற்றிபெற்று முதன் முறையாக "பிக்பாஷ்" கிண்ணத்தை கைப்பற்றியது. 

போட்டியின் ஆட்டநாயகனாக 38 ஓட்டங்களையும், இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய டேனியல் கிறிஸ்டியன் தெரிவுசெய்யப்பட்டார்.