புத்தளம், கொழும்பு பிரதான வீதியின் மஹாவெவ பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 19 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று மாரவில மஹாவெவ பகுதியில் வீதியோரத்தில் உள்ள மின்மாற்றி (Transformer) ஒன்றின் மீது மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 19 பேர் மாரவில மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்தமையினால் வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த மின்மாற்றி ஒன்றின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தை அடுத்து சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் மஹாவெவ பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும், மாரவில போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வாகன நெரிசலை சரிசெய்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.