இலங்கையின் இனப்பிரச்சினைக்கு எந்தவொரு சர்வதேச நாடாலும் தீர்வை வழங்க முடியாது - சம்பிக்க

Published By: Priyatharshan

17 Feb, 2019 | 05:05 PM
image

எந்தவொரு வெளிநாடுகளாலும் இலங்கைப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்க முடியாது. மறப்போம் மன்னிப்போம் என எதிர்காலம் தொடர்பில் சிந்திப்பதே யதார்த்தமானதாகும் என பெருநகரங்கள், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- தேசிய அரசாங்கமொன்று அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தற்போதும் அரசாங்கத்திற்கு உள்ளதா?

பதில்:- ஆம்

கேள்வி:- தேசிய அரசாங்கத்திற்கான அவசியம் என்ன?

பதில்:- நாட்டில் ஸ்திரமான அரசாங்கமொன்று அமைய வேண்டும். சிறந்த கொள்கையைக் கொண்ட அரசாங்கம் காணப்பட்டாலும், ஸ்திரத்தன்மையொன்று காணப்படாதுவிட்டால் அதனால் பயனில்லை. 1989, 2010 காலப்பகுதிகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களைத் தவிரவும் ஏனையவற்றில் எந்தவொரு கட்சியும் பாராளுமன்ற பெரும்பான்மையை கொண்டிருக்கவில்லை. கூட்டணி அமைத்தே ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே எஞ்சிய பாராளுமன்ற காலத்தில் ஸ்திரமான அரசாங்கமொன்றை முன்னெடுப்பதற்காகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டியுள்ளது.

கேள்வி:- அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதாக விமர்சனங்கள் செய்யப்படுகின்றதே?

பதில்:- 19ஆவது திருத்தச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம், அதிக ஆசனங்களைக் கொண்டிருக்கும் கட்சியானது ஏனைய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்க முடியும். அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாயின் பாராளுமன்றின் அனுமதியைப் பெறவேண்டும். அந்தவகையில் பல்வேறு அரசியல் கட்சிகள் காணப்பட்டாலும் பாராளுமன்றத்தினை ஆறு கட்சிகளே பிரதிநிதித்துவம் செய்கின்றன. அவற்றில் ஐ.தே.க.வுக்கே அதிக ஆசனங்கள் காணப்படுகின்றன. ஆகவே அக்கட்சி தேசிய அரசாங்கத்தினை பிறிதொரு கட்சியுடன் இணைந்து அமைக்கின்றது. இதில் எவ்விதமான சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளும் இல்லை. அடுத்ததாக அரசாங்கத்தில் உள்ள புதுமுக உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு தயாராக இருக்கும் உறுப்பினர்களும் அமைச்சுப்பதவிகளை கோரி நிற்கின்றார்கள். அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை மையப்படுத்தி அவர்களின் கோரிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக தேசிய அரசாங்கமொன்று அமையுமாக இருந்தால் எழுந்தமானமாக அமைச்சரவை எண்ணிக்கை அதிகரிக்கும் என்றில்லை.

கேள்வி:- தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அமைவதற்கு உதவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளனவா?

பதில்:- உத்தியோகபூர்வமாக பேச்சுக்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால்  கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்தில் பங்கேற்று அமைச்சுப் பதவிகளை வகிக்க வேண்டும்.  அரசாங்கத்தில் இணைவது சம்பந்தமாக தீர்க்கமான முடிவொன்றை கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

கேள்வி:- சம உரிமைகளைப் பெறுவதற்கான இலக்குடன் பயணிக்கும் கூட்டமைப்பை மத்திய அரசாங்கத்தில் இணைந்துகொள்ள வேண்டும் என்று ஏன் கூறுகின்றீர்கள்?

பதில்:- அரசியலமைப்பு ரீதியாக தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியாகவே பயணிப்பதால் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கப்போவதில்லை.  1978 ஆம் ஆண்டு திருச்செல்வத்திற்கு பின்னர் தமிழ்த் தரப்பினர் அமைச்சுப்பதவிகளை மத்திய அரசாங்கத்தில் வகித்திருக்கவில்லை. டக்ளஸ் தேவானந்தா மட்டுமே அமைச்சுப்பதவியை வகித்து வந்தார். எமது நாட்டின் அரசியலில் அமைச்சுப்பதவிகளை வகிப்பவர்கள் தமது பிரதேசங்களினையும், சமூகங்களையும் முன்னோக்கிக்கொண்டு சென்றுள்ளமையே வழக்கமாக காணப்படுகின்றது. வடக்கில் பொன்னம்பலம் ஆரம்பித்த கைத்தொழில் நிலையங்கள் தான் தற்போதும் காணப்படுகின்றன. தமிழ் மக்கள் தமது பிரதேசங்களில் முன்னேற்றமாக வாழ வேண்டும். அதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்தி செயற்பட வேண்டியுள்ளது. அம்மக்களின் பிரதிநிதிகள் மத்திய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதன் மூலம் அது சாத்தியமாகும்.

உதாரணமாக கூறுவதாயின், வடக்கிலும், கிழக்கிலும் உவர்நீர் நிலத்தடி நீரினுள் உட்புகும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் அடுத்த முப்பது வருடத்தில் குடிநீர் தொடர்பில் ஆபத்தான பிரச்சினை எழுவதற்கும் நிலப்பிரதேசங்கள் கடல் நீருக்கடியில் வாய்ப்புள்ளது. ஆகவே எதிர்காலம் தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. முஸ்லிம், மலையக மக்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டதன் காரணத்தால் அந்த மக்கள் குழுமத்தின் அடையாளங்கள் அழிந்துவிடவில்லை. வடக்கு மக்கள் வெளிநாடுகளிலும், நாட்டின் பலபாகங்களிலும் குடிபெயர்ந்து வாழ்கின்றார்கள். தற்போதைய தகவல்களின் பிரகாரம் கொழும்பில் மூன்று இலட்சம் வரையிலானவர்களும், கம்பஹாவில் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமானவர்களும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலைமைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். கூட்டமைப்பு இந்த பாராளுமன்ற காலத்தில் அரசாங்கத்துடன் இணைய முடியாது விட்டாலும் அடுத்த பாராளுமன்ற காலத்தில் மக்களின் ஆணையைப் பெற்று அரசாங்கத்தில் இணைந்து அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும். சம்பந்தனுக்கு எண்பத்தைந்து வயதாகிவிட்டது. அவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். அவருக்கு பின்னர் சுமந்திரன் உள்ளிட்ட இளைய உறுப்பினர்களும் பழைய விடயங்களை இன்னமும் 50வருடங்களுக்கு பேசிக்கொண்டிருக்கலாம். அதனால் எவ்வித நன்மையும் இல்லை. சமூகமே பின்னிலைக்குச் செல்லும்.

கேள்வி:- புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டசெயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளனவா?

பதில்:- புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக பொய்யாக பிரசாரம் செய்ய முடியாது. மூன்று வருடங்களாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பில் அங்கீகாரமும் அவசியமாகின்றது. தற்போதைய சூழலில் அது சாத்தியமில்லை. அதனால் அச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் ஆட்சி அமைந்தால் நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும் என்பது இடதுசாரிகளின் மாயையாகவுள்ளது. அதுபோன்று தான் தனிஈழம் அமைந்தால் தான் எமது பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்று தமிழ் மக்கள் மத்தியில் மாயை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சமூகத்திற்கு அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் கிடைக்க வேண்டிய விடயங்கள் கிடைத்தாகிவிட்டதன. யதார்த்தத்தினை புரிந்து கொண்டு அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.

கேள்வி:- புதிய அரசியலமைப்பொன்று உருவாகுவதற்கான நிலைமைகள் இல்லாத நிலையில் அவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், அதனால் நாடு பிளவடையப்போவதாகவும் தென்னிலங்கையில் பிரசாரம் செய்யப்படுகின்றது. உண்மையான நிலைமையை அம்மக்களிடத்தில் கூற வேண்டிய பொறுப்பில் தாங்களும் உள்ளீர்கள் அல்லவா?

பதில்:- சிங்கள மக்களில் மூன்றில் இருவர் ஒருதரப்பினரை ஆதரித்தால் ஏனைய சமூக மக்கள் எதிர்த்து வாக்களித்தாலும் ஆட்சியைக் கைப்பற்றி விட முடியும் என்ற கனவில் மஹிந்த ராஜபக்ஷ இருக்கின்றார். அதன் காரணத்தால் தான் இந்த விடயத்தினை மையப்படுத்தி சிங்கள மக்களை குழப்புகின்றார். இவர் விடுதலைப் புலிகளுடன் கொடுக்கல் வாங்கல்களைச் செய்தவர். சந்திரிகா காலத்தில் சமஷ்டி ஆட்சிக்கு ஆதரவளித்தவர். நாட்டின் மீதுள்ள பற்றில் அவ்வாறான கருத்துக்களை அவர் முன்வைக்கவில்லை. தனது குடும்பத்தினை முன்னிலைப்படுத்தி அதிகாரத்தினை கைப்பற்றவே அத்தகைய கருத்துக்களை முன்வைக்கின்றார். பல சந்தர்ப்பங்களில் இந்த விடயத்தினை நான் மக்களிடத்தில் கூறியுள்ளேன். இதேபோன்று, தமிழர்கள் தரப்பிலும் குழப்பும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

கேள்வி:- எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் பின்னணி  பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

பதில்:- இந்தியாவில் அடுத்து பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்குள்ள பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அடுத்து தானே ஆட்சிக்கு வரவுள்ளேன் என்று காண்பிக்க முனைகின்றார். அத்துடன்  நரேந்திரமோடி முதல் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்திய தரப்புக்கள் அனைவரும் எனது பொக்கட்டுக்குள் இருக்கின்றார்கள் என்று இலங்கை மக்களுக்கு காண்பித்து ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றார்.

கடந்த காலத்தில் பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் கொழும்பு உட்பட நாட்டின் முக்கிய பிரதேசங்களில் இந்தியாவும், சீனா, அமெரிக்கா என நிலங்களை வழங்கி அதன்மூலம் அந்நாடுகளை திருப்திப்படுத்துவதே அவருடைய இராஜதந்திர கொள்கையாக இருந்தது.  அதனையே தொடர முனைகின்றார். அண்மையில் சபாநாயகர் தலைமையில் இந்தியாவுக்குச் சென்ற கட்சித்தலைவர்கள் குழுவில் மஹிந்த ராஜபக் ஷவும் இடம்பெற்றிருந்தார். இந்த பயணத்தின்போது கட்சித்தலைவர் டெல்லி விமானநிலையத்தினை அடைந்ததும் அங்கு மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்பட பதாகை வைக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது. சாதாரணமாக பதாகை அங்கு வரமுடியாதல்லவா?

மஹிந்த ராஜபக்ஷ இந்திய அரசியல்வாதிகளை பின்னணியில் இருந்து இயக்குகின்றார். தற்போதும் இந்தியாவில் ஆளும், எதிர்த்தரப்பில் உள்ள அரசியல்வாதிகளை நேரடியாகவே இயக்குகின்றார் என்பதை பகிரங்கமாகவே கூறுகின்றேன். நபர்களை, நிறுவனங்களை இயக்குதல், பொருளாதார ரீதியாக கப்பங்களை வழங்கி இராஜதந்திர கொள்கைகளை மாற்றுதல் போன்ற மஹிந்த ராஜபக்ஷவின் வலைக்குள் இந்தியத் தலைவர்கள் சிக்குவார்களா என்பது எனக்குத் தெரியாது.

கேள்வி:- டிசம்பர் 9ஆம் திகதி பொதுஜன முன்னணியின் உறுப்பினர் ஜனாதிபதி வேட்பாளராக பதவி ஏற்பார் என்று பசில் ராஜபக்ஷ கூறியிருக்கின்ற நிலையில் அது சாத்தியமாகுமா?

பதில்:-  ஒக்டோபர் 6ஆம் திகதி சட்டரீதியாக ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு செய்யப்பட வேண்டும். அதன்படியே பசில் அவ்வாறு கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதி யார் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். மேலும் பசில் கட்சியொன்றை ஆரம்பித்தார். இதன்மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை முழுமையாக சிதைத்து விட்டார். ஜனாதிபதி மைத்திரிபால மீண்டும் சு.க. சார்பிலோ அல்லது கூட்டணி சார்பிலோ வேட்பாளராகுவதற்கு முஸ்தீபுகளைச் செய்தாலும் பசில் போன்றவர்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள். ஆனாலும் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக முடியும் என்று பாரிய அளவில் ஜனாதிபதி மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார். இதனால் அவர் பாரிய அரசியல் தவறுகளை தொடர்ச்சியாக இழைத்துக்கொண்டிருக்கின்றார். ராஜபக்ஷ குடும்பத்தினை பொறுத்தவரையில் தங்களது குடும்பத்தினைச் சேர்ந்த ஒருவரைத்தான் அவர்கள் வேட்பாளராக நியமிப்பார்கள்.  வேட்பாளராக நியமிக்கப்பட்ட பின்னரே தமது வெளிநாட்டு குடியுரிமையை அவர்கள் கைவிடுவார்கள்.

கேள்வி:- அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்க முடியுமா?

பதில்:- 1978ஆம் ஆண்டிலிருந்து இந்த விடயம் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது. 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் அதியுச்சமாக நிறைவேற்று அதிகாரத்தில் அதிகாரக்குறைப்பு செய்தாகிவிட்டது. இதற்கு மேல் செய்வதாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அவ்வாறு ஜனாதிபதி முறையையை நீக்குவதாயின் முன்னர் இருந்தவாறு தொகுதி முறையிலான தேர்தல் முறைமை மீண்டும் அமுலாக்கப்பட வேண்டும். அதற்கு நிறைவேற்று அதிகாரத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்று கூறும் ஜே.வி.பி உள்ளிட்ட எந்த தரப்பும் தயாராகவில்லை.

கேள்வி:- ஜெனீவா தீர்மானத்தில் அரசாங்கம் இணங்கிக்கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்தாமையினால் எதிர்வரும் கூட்டத்தொடரில் சவாலுக்குள்ளாக வேண்டியேற்படும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- அரசாங்கம் என்ற வகையில், செய்யக்கூடிய அதியுச்ச செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டு பணியகம் போன்ற சட்ட ரீதியாக அமைக்கப்பட்டுள்ளன. மேலதிக விடயங்களை முன்னெடுப்பத்தில் அரசியல் ஸ்தீரத்தன்மை இன்மையும் காரணமாகின்றது. என்னைப் பொறுத்த வரையில் இந்த விடயத்தினை இதற்கு அப்பால் கொண்டு செல்வதை நிறுத்த வேண்டியுள்ளது.

பிரித்தானியா, ஜேர்மன், கனடா உட்பட எந்தவொரு வெளிநாடுகளாலும் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வினை வழங்க முடியாது.  பிரபாகரனின் புதல்வனின் மரணத்தினைப் பற்றிப் பேசுகின்றார்கள். அந்த அமைப்பின் ஏனையவர்கள் பற்றி பேசுவதில்லை. அதேபோன்று விடுதலைப்புலிகள் அமைப்பும் கொலைகளைச் செய்துள்ளது. சிங்கள மக்களை மட்டுமல்ல, அமிர்தலிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்களையும் அவர்களே படுகொலை செய்தார்கள். ஆகவே இந்த விடயங்களை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதால் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. மேலும், மரணமடைந்த பிரபாகரன், புதல்வர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதை விடவும் சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் குடும்பங்களின் எதிர்காலத்தினையே கவனத்தில் கொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகளும், படைத்தரப்பினரும் கொலைகளைச் செய்தார்கள் என்பது உண்மை தான். அதனை தேடிக்கொண்டிருப்பதால் எவ்விதமான பயனுமில்லை. யுத்தக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, விடுதலைப்புலிகள் தரப்பினரையும், படைத்தரப்பினரையும் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் அந்த அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். யுத்தக்குற்றமின்றி தனிப்பட்ட காரணங்களுக்காக குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

கேள்வி:- எவ்வாறாயினும், அரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளதல்லவா?

பதில்:- ஜெனீவா விடயத்தில் அரசாங்கத்தின் கொள்கைகள் தவறானவை. செய்யமுடியாத விடயங்களை செய்வதாக கூறியுள்ளது. அது நடைமுறைச் சாத்தியமற்றதொன்றாகும். அரசாங்கம் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரேரணையொன்றை கொண்டுவரவேண்டும். இக்காலப்பகுதியில் யாரும் காணாமலாக்கப்படவில்லை. கொலை செய்யப்படவில்லை. நாட்டின் நிலைமை சுமுகமாகவும் அமைதியாகவும் உள்ளது. இதனை மேற்குலத்திற்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. சந்திரிகா அம்மையார் தனது கணவரைக் கொலை செய்த ஜே.வி.பியுடன் கூட்டணி அமைக்க முடிந்திருக்கின்றது. பிரேமதாஸ, காமினி திஸாநாயக்க போன்றவர்களை கொலை செய்த விடுதலைப்புலிகளுடன் ஐ.தே.க சமாதான ஒப்பந்தம் செய்திருக்கின்றது. அவ்வாறு கடந்த காலத்தினை மறந்து கடும்போக்கானவர்களுடன் இணைந்து செல்ல முடியுமென்றால் சாதாரண மக்களால் ஏன் இணைந்து செல்ல முடியாது. இதனை மேற்குலக நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கேள்வி:- பிரித்தானியா தலைமையில் இம்முறை மீண்டும் இலங்கை மீது பிரேரணை கொண்டுவரப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றதே?

பதில்:- கடந்த காலத்தில் ஜெனீவா விடயத்தில் இணை அனுசரணை வழங்கியது முதல் தவறான கொள்கையுடன் அணுகியமையால் தான் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை விடயத்தினை உள்நாட்டில் தான் தீர்த்துக்கொள்ள முடியும். கடந்த பத்தாண்டுகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து தொடர்ந்தும் பேசிக்கொண்டிருப்பதால் பயனில்லை. வடக்கில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் பதாகைகளுடன் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் போன்று தென்னிலங்கையில் உள்ள மக்களாலும் இருக்க முடியும். அவ்வாறான நிலைமையை தவிர்க்க வேண்டும்.  காணாமல் போன சம்பவங்களுக்கு யார் காரணம், யாருடைய கையில் இரத்தக்கறை என்று பார்த்தால் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்களிலிருந்து கைதுகளை செய்ய வேண்டிய நிலைமை தான் ஏற்படும். அதுமட்டுமன்றி படையினர் மீது விரல் நீட்டப்படுகின்றபோது, அதற்கு சமாந்தரமாக புலிகள் மீதும் விரல் நீட்டப்படும். அவ்வாறாயின் படையினர்கள் கைதாகின்றபோது விடுதலை செய்யப்பட்டுள்ள 12500விடுதலைப் புலி உறுப்பினர்களையும் மீண்டும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டியேற்படும். நீதியை நிலைநாட்டுவதென்றால் அவ்வாறான நடவடிக்கையைத் தான் எடுக்க வேண்டும்.

கேள்வி:- மீண்டும் பிரேரணை கொண்டுவரப்படுவதற்கான முயற்சிகளுக்கு முகங்கொடுப்பதற்கு அரசாங்கத்தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா?

பதில்:- இலங்கை விடயத்தினை கையிலெடுக்கும் நாடுகளுக்கும் எமக்கும் நெருக்கமான இருதரப்பு உறவுகள் காணப்படுகின்றன. அந்த நாடுகள் மீதும் சிரியா போன்ற நாடுகளில் முன்னெடுத்த நடவடிக்கைகளால் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அத்துடன் இலங்கை மீது கொண்டுவரப்படும் பிரேரணையை நீக்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.  நடைமுறை ரீதியில் நாட்டினுள் முன்னெடுக்க கூடிய நடவடிக்கைகள் குறித்து சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதோடு,  காணமல்போனவர்கள், மரணமடைந்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். 'மறப்போம் மன்னிப்போம்' என்பதற்கு இணங்க கடந்த கால விடயங்களை மறந்து எதிர்காலத்தினை நோக்கி செயற்பட வேண்டும். ஆணைக்குழக்கள் அமைத்தல், விசாரணைகளை முன்னெடுத்தல், ஜெனீவாவில் தீர்மானங்களை நிறைவேற்றுதல் எல்லாம் இனங்களுக்கிடையிலான விரிசலையே ஏற்படுத்தும். இந்த நிலைப்பாட்டினை நான் பிரதமருக்கு தெரிவித்துள்ளேன். அமைச்சரவையிலும் வெளிப்படுத்தி இம்முறை நடைமுறைச்சாத்தியமான விடயங்களை முன்மொழிவதற்கே கோரிக்கை விடுப்போம்.

நேர்காணல் ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அணுவாயுதங்களுக்கான செலவிடுதலை அதிகரிக்கும் நாடுகள் !

2024-06-18 16:20:51
news-image

13ஆவது திருத்தத்தில் அரசியல் பந்தாட்டம் ;...

2024-06-18 11:40:13
news-image

Factum Perspective: இலங்கையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்...

2024-06-17 15:40:00
news-image

சமூகமயமாக்கலில் பிரத்தியேக வகுப்புக்களின் திசை திரும்பலும்...

2024-06-17 13:19:42
news-image

பல்திறப்புலமையும் பன்முக ஆற்றலும் கொண்ட ஆளுமை...

2024-06-16 21:16:51
news-image

அல்அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க மறுப்பு

2024-06-16 17:12:22
news-image

வவுனியா வடக்கில் மாற்றப்படும் குடிப்பரம்பல் -...

2024-06-16 19:19:17
news-image

சர்வதேச மனித உரிமையும் விநோதமானவர்களும்

2024-06-16 16:38:37
news-image

தமிழ் பொது வேட்பாளரால் தமிழர்களுக்கு என்ன...

2024-06-16 16:15:21
news-image

காஸா போர் நிறுத்தம் ‘பிரசாரப்படுத்தப்படும் பாசாங்குகள்’

2024-06-16 16:40:06
news-image

வலதுசாரி எழுச்சியை நோக்கி ஐரோப்பா கண்டம்?

2024-06-16 19:18:28
news-image

முஸ்லிம்களின் அபிலாஷையும் ஐந்து கிலோ அரிசிப்...

2024-06-16 16:03:00