தென்னிந்திய நகரமான பெங்களுரில் இந்தியாவின் பிரபல ஆங்கில தினசரிகளில் ஒன்றான ' இந்து' வினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கடந்தவாரம் சென்றிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் உறவுகளைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் இறங்கியிருப்பதாகத் தோன்றுகின்ற சூழ்நிலையில், புதுடில்லி இலங்கைத் தலைவர்களில் தனது விருப்புக்குரியவர் என்று யாருமில்லை என்று அறிகுறி காட்டியிருப்பதுடன் சகல தலைவர்களுடனும் நட்புரிமையைப் பேணும் கொள்கையொன்றை கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

ராஜபக்சவின் அரசியல் எதிரியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மூன்று நாள் நடைபெற்ற  2019 உலக நிலைபேறான அபிவிருத்தி உச்சிமகாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்தவாரம் புதுடில்லிக்கு சென்றிருந்தார். தீவிர அரசியலில் இல்லையென்றாலும், குமாரதுங்க தற்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு முக்கியமான ஒருவராக நோக்கப்படுகின்றார்.ஏனென்றால் வெளியுலகுடன் குறிப்பாக இந்தியாவுடனும் மேற்கு நாடுகளுடனும் நெருக்கமான தொடர்புகளை அவர் கொண்டிருக்கிறார். 

 ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான எதிரணியின் பொதுவேட்பாளராக 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யின் மூத்த  தலைவர்களில் ஒருவரான  மைத்திரிபால சிறிசேனவை இணங்கவைத்து ராஜபக்சவைத் தோாற்கடிப்பதற்கான வியூகத்தை வகுப்பதில் குமாரதுங்க முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை வகித்திருந்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்புலத்தில், குமாரதுங்க வகிக்கின்ற பாத்திரம் என்வென்று தெளிவாகத் தெரியவில்லை.ஆனால் குறிப்பாக , ஜனாதிபதி சிறிசேன முன்னாள் ஜனாதிபதியுடன் மீண்டும் சேர்ந்துகொண்டுள்ளதை அடுத்து மிகுந்த ஜாக்கிரதையாக இந்தியா  நடந்துகொள்கிறது.

இந்தியாவின் 70 வது குடியரசு தினத்தையும் இலங்கையின் 71 வது சுதந்திரதினத்தையும் முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை-- இந்திய சங்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய உயர்ஸதானிகர்  தரன்ஜித் சிங் சந்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான நட்புறவின் சிற்பி என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வர்ணித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான நட்புறவின் சிற்பியாக விக்கிரமசிங்க இருந்துவந்திருக்கிறார்.ஏனென்றால், 2017 ஏப்ரலில் அவர் இந்தியாவுக்கு மேற்கொண்ட முக்கியத்துவம்வாய்ந்த விஜயத்தின்போதே பொருளாதாரத் திட்டங்களில் ஒத்துழைத்துச் செயற்படுவது தொடர்பான உடன்படிக்கையில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டன.அந்த உடன்படிக்கை இலங்கை -- இந்திய அபிவிருத்தி கூட்டுப்பங்காண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டவரைவை வழங்கியது என்றும் உயர்ஸ்தானிகர் சந்து தமதுரையில் கூறினார்.

 இவ்வருட இறுதியில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கின்றது.இதை மனதிற்கொண்டே வெகு ஜாக்கிரதை உணர்வுடன் இந்தியா சகல இலங்கைத் தலைவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் ' கயிற்றின் மேல் நடக்கும் ' காரியத்தில் இறங்கியிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுகின்ற கட்சி இலங்கையில் இந்தியா முன்னெடுக்கும் செயற்திட்டங்ளுக்கு அனுசரணையாக இருக்கும் அல்லது தடுக்கும் என்று கருதப்படுகிறது.

ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிங்கள பௌத்தர்கள் மத்தியில் செல்வாக்கு கொண்டதாக இருப்பதை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் பெரும்பான்மையான வாக்குகளைத் தனதாக்கிக்கொள்ளும் என்று கருதப்படுகின்ற அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச களமிறக்கப்படும் பட்சத்தில் தேர்தலில் அந்த கட்சியின் வெற்றிவாய்ப்பை முழுவதுமாக நிராகரிக்கமுடியாமலும் போகலாம்.அதனால் தற்போது வீடமைப்பு அமைச்சராக இருக்கும் அவரின் வீடமைப்புத்திட்டங்களை ஆதரிப்பதில் இந்தியா முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றது.

  2015 ஆண்டில் இருந்ததைவிடவும் இந்தியா இப்போது விவேகமானதாக இருக்கிறது.ஒரு தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்துவிட்டால் அவர் மறக்கப்பட்டுவிடுவார் என்று நம்பிக்கைகொண்டு 2015 ஆம் ஆண்டில் தவறிழைத்த இந்தியா ' எதிரிகள் எவரையும் உருவாக்குவதில்லை' என்ற சிந்தனையைப் பின்பற்றுகின்றது.

மகிந்த ராஜபக்ச கடந்தவாரம் பெங்களுரில் நிகழ்த்திய உரையில் ஒத்துக்கொண்டதைப் போன்று  2014 ஆம் ஆண்டில்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி பதவியிழந்தபோது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் தடங்கல் ஏற்பட்டது.அன்றைய  ராஜபக்ச அரசாங்கத்துடன் ஆரோக்கியமான உறவுகளை ஐக்கிய முற்போக்கு கூட்டணி வைத்திருந்தது. பிறகு பதவிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் உறவுகளைச் சீர்செய்ய  சற்று காலம் எடுத்தது.இறுதியில்  இந்தியா ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்து 2015 ஆம் ஆண்டில் ஜனதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக சிறிசேன களமிறக்கப்பட்டார்.

ஆனால், 2017 அளவில் இந்தியா அதன் தவறை புரிந்துகொண்டது.2017 மார்ச்சில் பிரதமர் மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது மகிந்த ராஜபக்சவையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான அவரது சகோதரர் கோதாபய ராஜபக்சவையும் சந்தித்தார்.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை உயரஸ்தானிகர் சந்து இந்தியா இலங்கையுடன் விதியால் இணைந்துள்ளது என்று குறிப்பிட்டார். இலங்கைத்தீவல் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு எதிராக இந்தியா மிகுந்த விழிப்புடன் இருக்கிறது.அதனால்தான் வேறு எந்த ' வெளியாரினாலும் '  பதிலீடுசெய்யமுடியாத பிணைப்புகளை கொழும்பும் புதுடில்லியும் கொண்டிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுவதற்காக வரலாற்றை இந்தியா நினைவூட்ட விரும்பியது என்பதை சந்துவின் கூற்று வெளிக்காட்டியது.

கொழும்பில் ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்படுவதாக இருந்தாலும் கூட 2017 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட  ( இலங்கையில் 15 க்கும் மேற்பட்ட இந்திய  செயற்திட்டங்கள் தொடர்பான) உடன்படிக்கைகள் தொடர்ந்தது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதிலேயே புதுடில்லி இப்போது கவனத்தைக் குவித்திருக்கிறது.

கொழும்புக்கு வெளியே கெரவலப்பிட்டியவில் திரவ இயற்கை வாயு ஆலையை அமைப்பதற்கான இந்திய -- ஜப்பான் கூட்டுத் திட்டத்தைத் தவிர இந்தியாவின் சில திட்டங்கள் தடங்கலுக்குள்ளாகியிருக்கின்றன.மறுபுறத்தில் சீனா இலங்கையில் தான் விரும்புகிற திட்டங்களை ( பெரும்பாலானவை தனியார் கட்டிட நிர்மாணத்துறை சார்ந்தவை) பெற்றுக்கொள்கிறது.

சமூகத்துக்கு பொருத்தமான செயற்திட்டங்களை முன்னெடுப்பதிலேயே ஈடுபட்டிருப்பதாக இந்தியா வாதாடுகிறது." இலங்கையில் இலவசமாக 47,000 வீடுகளை நிர்மாணித்துக்கொடுத்த ஒரு நாடு இருக்குமென்றால் அது இந்தியாதான்.இன்னொரு 16,000 வீடுகளை இலங்கை பூராவும் நாம் கட்டிக்கொடுப்போம்.இலங்கையின் சகல பாகங்களிலும் அனேகமாக சகல துறைகளிலும் நன்கொடையில் 71 அபிவிருத்தி திட்டங்களை  பூர்த்திசெய்த ஒரு நாடு இருக்குமென்றால் அது இந்தியாவே.இலங்கையின் கீரீடத்தில் இருக்கும் ஆபரணமான பௌத்தமதத்தை வழங்கிய நாடு ஒன்று இருக்குமென்றால் அது இந்தியாவே. இலங்கை இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வேளைகளில் எல்லாம் சில மணித்தியாலங்களில் ஆட்களையும் பொருட்களையும் அனுப்பி உதவிசெய்திருக்கக்கூடிய நாடு என்றால் அதுவும் இந்தியாவே" என்று கொழும்பில் இந்திய குடியரசுதின வைபவத்தில் சந்து குறிப்பிட்டார்.

இந்தியாவின் பல உதவிகள் நன்கொடைகளே தவிர கடன்களை அடிப்படையாகக் கொண்டவையல்ல என்று இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்த கூற்று சீனாவை நேரடியாகத் தாக்குவது போன்று அமைந்திருந்தது.சீனா அதன் திட்டங்களின் மூலமாக இலங்கையை பொறிக்குள் தள்ளுகிறது என்று பரவலாக கருதப்படுகின்ற பின்புலத்தில்  சந்துவின் இந்தக்கருத்தை நோக்கவேண்டும்.

" நண்பர்களே, இலங்கைக்கு பல நண்பர்களும் பங்காளிகளும் இருக்கிறார்கள்.அவர்களில் சிலர் புதிய உலகொன்றைக்காட்டுவதாக உறுதியளித்துக்கொண்டு பிரகாசமான கனவுகளை விற்பனை செய்கிறார்கள்.ஆனால், இலங்கையுடன் விதியால் இணைந்திருக்கும் ஒரு நாடு என்றால் அது இந்தியாவே " என்று இலங்கை -- இந்திய சங்கத்தின் நிகழ்வில் சந்து கூறினார்.

 மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் இலங்கைக்குள் சீனா பிரவேசித்தபோது இந்தியா பின்னரங்கத்துக்குச் சென்றது. புதிய இந்திய செயற்திட்டங்களுக்கான அத்திபாரம் 2017 ஆம் ஆண்டிலேயே போடப்பட்டது. அபிவிருத்திக்கு பெருமளவுக்கு தொடர்பும் பொருளாதார ஒருங்கிணைப்புமே முக்கியமானவை என்று எப்போதும் நம்பிக்கைகொண்டுள்ள தூரநோக்குடைய அரசியல் ஞானி என்று உயர்ஸ்தானிகர் சந்துவினால் வர்ணிக்கப்பட்ட பிரதமர் விக்கிரமசிங்கவினாலேயே அந்த இந்திய செயற்திட்டங்கள் தொடங்கப்பட்டன.

இலங்கை -- இந்திய சங்கத்தின் நிகழ்வில் உரையாற்றிய விக்கிரமசிங்க இலங்கையையும் இந்தியாவையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று வர்ணித்தார்.எமக்கிடையிலான உறவுகளை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதிலேயே அபிவிருத்தியின் முன்னேற்றவேகம் தங்கியிருக்கிறது என்றும் மகத்தான வாய்ப்பு இருக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

வாணிப ஒருங்கிணைப்பைப் பொறுத்தவரை இலங்கையும் இந்தியாவும் மற்றைய நாடுகளுக்கு ஒரு உதாரணமாக இருக்கவேண்டும் ; உதாரணமாக இருக்கமுடியும் என்றும் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

 இலங்கையில் சீனாவுக்கு எதிராக இருக்கக்கூடிய உணர்வுகளை விடவும் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் வலுவானவையாக இருப்பதன் பின்புலத்திலேயே விக்கிரமசிங்க இத்தகைய கருத்தை முனவைத்திருக்கிறார் என்பது முக்கியமாகக் கவனிக்கவேண்டிய ஒன்றாகும்.என்றாலும், பல்வேறு காரணிகளைச் சுட்டிக்காட்டி இலங்கையர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பியக்கங்களே இந்தியாவின் ஆதரவுடனான செயற்திட்டங்கள் பலவற்றுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன.

பொறியியலாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களின் அமைப்புக்களினால் முன்னெடுக்கப்பட்ட பாரிய எதிர்ப்பியக்கங்களை அடுத்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உத்தேச பொருளாதார -- தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

( சவுத் ஏசியன் மொனிட்டர்)