ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில், சுவாமி சிலைகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருச்சி மாவட்டம் வாத்தலை அருகேயுள்ள காவிரி ஆற்றில், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வலைவீசி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு மீனவரின் வலையில் பெரிதாக ஏதோ ஒன்று சிக்கியதுபோல இருந்ததால் அவர் தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று வலையை பார்த்த போது வலையில், 2 சிலைகள் சிக்கியிருந்தமை தெரிய வந்தது.

இதையடுத்து, மற்ற மீனவர்களின் உதவியுடன் அந்த சிலைகளை கரைக்கு எடுத்துவந்து பார்த்தபோது, அவை, விநாயகர் மற்றும் நடராஜர் சிலைகள் என தெரிய வந்தது. இது குறித்து வாத்தலை பொலிஸாருக்கும், கரியமாணிக்கம் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், அந்த சிலைகளை மீட்டனர்.

இதுகுறித்து பொலிஸார் தெரிவிக்கையில் “ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 2 சிலைகளும் 2 அடி உயரம் உள்ளது. அவை, ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சிலைகளை, கோயிலில் இருந்து யாரேனும் கடத்திச் செல்லும் வழியில் பொலிஸாருக்கு பயந்து ஆற்றில் வீசிவிட்டு சென்றிருக்கலாம். இந்த சிலைகள் எந்த கோயிலைச் சேர்ந்தது என்று விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சிலைகள் இரண்டும், திருச்சியில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன. காவிரி ஆற்றில் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், திருச்சியில் பரபரப்பாக பேசப்பட்டது.