அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவமொன்றில் 5 பேர் உயிரிழந்ததுடன், 6 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் இல்லினாயிஸ் மாகாணத்துக்கு உட்பட்ட சிகாகோ நகரின் புறநகர் பகுதியான அரோராவில் ஹென்றி பிராட் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களுக்கான வால்வுகள் தயாரிக்கும் இந்த நிறுவனம் வட அமெரிக்காவின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு கட்டடம் ஒன்றில் நேற்று முன்தினம் பகலில் மும்முரமாக பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பணியாற்றிக்கொண்டு இருந்த கேரி மார்ட்டின் (வயது 45) என்ற ஊழியர் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து சக ஊழியர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதனால் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் ஏனையோர் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கும் இங்கும் ஓடினர்.  இது குறித்து உடனே அரோரா நகர பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதற்கமைவாக அங்கு விரைந்து வந்த பொலிஸழர் ஹென்றி பிராட்டை சரணடையுமாறு கூறினர். ஆனால் அவர் பொலிஸாரையும் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.இதில் 6 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து பொலிஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். காயமடைந்த பொலிஸார் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறன்றமையும் குறிப்பிடத்தக்கது.