குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களின் நலன் குறித்து எவருமே அக்கறை செலுத்துவதில்லை. கடந்த கால கசப்பான பல சம்பவங்களிலிருந்து அம்மக்களை மீட்க வேண்டிய மிகப்பெரிய கடப்பாடு எம்முன் உள்ளது. 

அதற்கு சிறந்த வழி அரசியல் ரீதியான அதிகாரங்களை பெற்றுக்கொள்ளவே நான் ஜனாதிபதியின் ஆதரவோடும்  மக்களின்  கோரிக்கையோடும் வன்னி மாவட்டத்தில் எனது  அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளேன் என்று தெரிவிக்கிறார் 

முன்னாள் பிரதி அமைச்சரும் வன்னி மாவட்டத்திற்கான ஜனாதிபதியின் விசேட திட்டங்களுக்கான பணிப்பாளரும்  ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவருமான பிரபா கணேசன். 

இதேவேளை, நான் பிரதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தலைநகரில் அமைந்துள்ள 46 பாடசாலைகளுக்கும் ஏற்படுத்திக்கொடுத்த வளங்களை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டால் என்னால் கணிசமான வாக்குகளைப்பெற முடியும்.  அது வெற்றியடையச்செய்யும் வாக்குகளாக இல்லாவிட்டாலும் தமிழர் வாக்குகளை சிதறடித்து விடும். 

அதனால் தமிழர் பிரதிநிதித்துவம் ஒன்று இழக்கப்படும் அபாயமே உள்ளது. ஆகையால் தான் நான் ஜனாதிபதியின் ஆதரவோடும்  மக்களின்  கோரிக்கையோடும் வன்னி மாவட்டத்தில் எனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளேன்.

தனது அரசியல் செயற்பாடுகள் குறித்து வீரகேசரிக்கு அவர் வழங்கிய செவ்வி வருமாறு,

கேள்வி: திடீரென வன்னி மாவட்டத்தின் மீது கரிசனை ஏற்படக்காரணம்?

பதில்: ஜனாதிபதியின் வன்னி மாவட்டத்துக்கான விசேட திட்டங்களுக்கான பணிப்பாளர் என்ற வகையில் அங்குள்ள மக்களின் நிலைமைகளை நன்றாக அறிந்து வைத்துள்ளேன். அங்கு வாழ்ந்து வரும் தமிழ் மக்களில் குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களின் நலன் குறித்து எவருமே அக்கறை செலுத்துவதில்லை. கடந்த கால கசப்பான பல சம்பவங்களிலிருந்து அம்மக்களை மீட்க வேண்டிய மிகப்பெரிய கடப்பாடு எம்முன் உள்ளது. 

அதற்கு சிறந்த வழி அரசியல் ரீதியான அதிகாரங்களை பெற்றுக்கொள்வதே ஆகவே அம்மாவட்டத்தில் எனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளேன் . இது மக்களுக்கான ஒரு செயற்பாடு என்பதே முக்கியம். இல்லாவிட்டால்   அபிவிருத்திப்பணிப்பாளர் என்ற பதவியில் பேசாமல் இருக்கலாம் அல்லவா?

கேள்வி: வன்னி மாவட்டத்தின் அரசியல் பிரதிநிதிகள் இந்த மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லையா?

பதில்: நான் பிரதேசவாதம் பேசவில்லை. ஆனால், யதார்த்தமான உண்மைகள் சிலவற்றை இங்கு முன்வைக்க வேண்டும். வன்னி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கையைப்பார்க்கும் போது ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யக்கூடிய அளவுக்கே இருக்கின்றனர். ஆனால், அங்கு வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கணிசமான தமிழ் மக்களும் வாக்களித்துள்ளனர் என்பதே உண்மை. ஏனைய நான்கு ஆசனங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குரியவை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அங்குள்ள தமிழ் மக்கள் அரசியல் உரிமை பிரச்சினைகளை விட அடிப்படை உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திகளை எதிர்பார்த்துள்ளனர்.   

அதே வேளை இக்கிராமத்தின் முஸ்லிம் கிராமங்களைப்பார்க்கும் போது அங்கு சகல விதங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. குறித்த பிரதிநிதிகளுக்கு தமது வாக்குகளை அளித்த தமிழ் மக்கள் இன்று கைவிடப்பட்டுள்ளனர். கூட்டமைப்பினரும் இவர்களை ஏமாற்றி வருகின்றனர்.   இதற்காக நான் முஸ்லிம் அமைச்சர்களைக் குறை கூறவில்லை மாறாக தமிழ் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய எவரும் அங்கு இல்லை என்பது இப்போதுள்ள குறை.  2013 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரங்களுக்காக அங்கு சென்ற போது மக்கள் படும் அவலங்களை நேரடியாக கண்ட பிறகே இந்த முடிவுக்கு வந்தேன்.

கேள்வி: எந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப்போகின்றீர்கள்?

பதில்: ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆனது ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றது. ஆகவே, அதில் நான் போட்டியிடும் எண்ணம் உள்ளது அதே போன்று தனித்துவமாக எனது கட்சியில் போட்டியிடும் தைரியமும் உள்ளது. அதற்கான மக்கள் ஆதரவு எனக்கு உள்ளதையே நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

கேள்வி: ஐ.தே.கவில் போட்டியிட்டு பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டீர்கள் இப்போது அதை விமர்சிக்கும் அளவுக்கு செல்ல காரணம்?

பதில்: 200௧ ஆம் ஆண்டு ஐ.தே.கட்சியூடாக சகோதரர் மனோ கணேசன் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். முதற்தடவையாக தலைநகரில் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப்பிரதிநிதித்துவமாக அது அமைந்தது. 2004 ஆம் ஆண்டு மேலக மக்கள் முன்னணி என்ற எமது கட்சியினூடாக நான் மேல் மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டேன். 2010 ஆம் ஆண்டும் கூட்டணி அமைத்து ஐ.தே.க யானைச் சின்னத்தில் மனோ கணேசன் கண்டியில் போட்டியிட்டு தோல்வியைத்தழுவ நான் கொழும்பில் வெற்றி பெற்றேன். 

இது ஐ.தே.கவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மட்டுமன்றி எங்களுக்கு ஒரு தேசிய பட்டியலை தருவதாக அச்சந்தர்ப்பத்தில் ரணில் வாக்களித்திருந்தாலும் கூட அதை அவர் செய்யவில்லை.  இதனால்  தலைநகரில் தமிழ் பிரதிநிதித்துவத்தை கட்டியெழுப்ப சகோதரரோடு ஒன்றிணைந்து சேவையாற்ற எனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்து தேசிய பட்டியல் மூலம் அவரை உள்ளீர்க்க முன்வந்தும் அதை அப்போதைய கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஏற்றுக்கொள்ளவில்லை. 

இவ்வாறு தமிழ் பிரதிநிதிகளை ஏமாற்றும் பண்பு கொண்ட ரணிலின் உண்மை முகம் தெரிய வந்தது. அதன் பின்பு சகோதரர் மனோ கணேசனின் ஆலோசனையின் படியே மாநகர சபை தேர்தலில் ஐ.தே.கவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பஸில் ராஜபக்ஷவை சந்தித்தேன். அதற்கு அவர் நாம் கொண்டு வரும் 18 ஆம் திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு அளித்தால் 2011 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள மாநகர சபை தேர்தல்கள் பற்றி பேசலாம் என்றார். அதன்படி பாராளுமன்றத்தில் நான் அதற்கு ஆதரவாக வாக்களித்தேன். அதேநேரம் தலைநகர் கல்வி அபிவிருத்திக்கு நான் விடுத்திருந்த கோரிக்கையையும் அவர்கள் ஏற்றார்கள். ஆனால், என்னை அவ்வாறு செயற்படக்கூறிய மனோ கணேசன் பின்பு என்னுடன் முரண்பட்டார்.

கேள்வி: கல்வி அபிவிருத்திக்காக எவ்வளவு செலவிட்டுள்ளீர்கள்?

பதில்: பஸில் ராஜபக்ஷ எனது கோரிக்கைக்கு செவி சாய்த்து 25 கோடி ரூபாவை கொழும்பு மாவட்ட கல்வி அபிவிருத்திக்கு ஒதுக்கினார். இதன் மூலம் 46 தமிழ் பாடசாலைகளுக்கு கட்டிட,தளபாட ,கணனி வளங்களை,விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் ஏன் 2690 தமிழ் ஆசிரிய நியமனங்களை மேல் மாகாண  தமிழ்ப் பாடசாலைகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறேன்.    இதை குறித்த பாடசாலை சமூகமே கூறும்.

கேள்வி: தலைநகரில் கிட்டத்தட்ட 3 இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றார்கள். 3 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் இடத்தில் ஒரு பிரதிநிதித்துவத்தை பெறுவதே சவாலாக இருக்கின்றது இதற்கு என்ன காரணம்?

பதில்: உண்மையில் நீங்கள் கூறும் தொகையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம்  பேர் வரையிலேயே வாக்காளர்களாக இருக்கின்றனர். இதில் வடபகுதியைச்சேர்ந்தவர்கள் சுமார் 40 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இவர்களில் தேர்தல் காலங்களில் வாக்களிப்பவர்கள் 10 ஆயிரம் பேர் மட்டுமே. அதே போன்று அவிசாவளை,கொலன்னாவ,தெஹிவளை,மொரட்டுவ போன்ற பகுதிகளில் சிங்கள மக்களுடன் கலந்து வாழக்கூடிய தமிழ் மக்கள் தங்களுடைய வாக்குகளை சிங்கள வேட்பாளர்களுக்கே வழங்குவர். மிகுதியான சுமார் 70 ஆயிரம் வாக்குகளே தமிழ் வேட்பாளருக்குக்கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன. 

கடந்த முறை மனோ கணேசன் பெற்ற சுமார் 67 ஆயிரம் வாக்குகளில் கூட ரணில் விக்கிரமசிங்க மற்றும் ரவி கருணாநாயக்கவிற்கும் அளிக்கப்பட்ட வாக்குகளும் இருந்தன. இல்லாவிட்டால் இன்னுமொரு பிரதிநிதித்துவமும் கிடைத்திருக்கும். அதாவது தமிழ் வேட்பாளருக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என்ற மனோபாவம் தலைநகர் வாழ் தமிழர்களிடையே இன்னும் வளரவில்லை.

கேள்வி: இறுதியாக இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் இ.தொ.காவுடன் இணைந்து கொழும்பில் போட்டியிட்டும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறமுடியவில்லையே?

பதில்: உண்மை. ஆனால் தனித்துப்போட்டியிட்டிருந்தால் சில வெற்றிகளைப்பெற்றிருக்கலாம் என்று கூறியவர்களும் இருக்கின்றார்கள் .அதற்காக நான் இ.தொ.கா வை குறை கூற மாட்டேன்.ஏனென்றால் கடந்த முறை நான் தேர்தல் கூட்டணிக்காகவே இ.தொ.காவுடன் இணைந்து போட்டியிட்டேன். அப்போது எமது கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.எனக்கு சின்னம் தேவைப்பட்டது. அதற்காக எனக்கு உதவிகளை நல்கிய இ.தொ.காவுக்கு நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளேன்.அதே நேரம் சுயேட்சையாக போட்டியிட்டிருந்தால் ஆசனங்களைப்பெற்றிருக்கலாம் என்ற மக்களின் எண்ணங்களையும் புரிந்து கொள்கிறேன்.

கேள்வி: புதிய அரசியலமைப்பு பற்றி பேசப்படுகிறதே?

பதில்: மலையகம் மற்றும் தென்னிலங்கையில் இருக்கும் தமிழ் முற்போக்குக்கூட்டணி வடபகுதியில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலமாகத்தான் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாகியது.அப்போது அவர்கள் கூறியது என்னவென்றால் எமது அரசாங்கத்தை நாம் உருவாக்கியுள்ளோம் அதன் மூலமாக எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என்பதாகும்.ஆனால் நான்கு வருடங்கள் சென்றும் கூட அரசியலமைப்பு குறித்து எவ்வித முன்னேற்றங்களும் இல்லை. இதனால் மக்கள் வெறுப்பை இவர்கள் சம்பாதித்துள்ளனர். இறுதியாக இருக்கும் ஒரு வருட காலத்தில் என்ன செய்ய முடியும்? 

ஆகையால் அரசியல் அமைப்பை தரப்போகிறோம் என்ற தேர்தல் வாக்குறுதியையே  இவர்கள் முன்வைக்க ஆரம்பித்துள்ளனர். இது ஒரு நாடகமாகும். அடுத்து  நடக்கவிருக்கும் தேர்தல்களில் வெற்றி பெற இவர்கள் முன்னெடுத்திருக்கும் ஒரு பிரசார நடவடிக்கையே இது. மேலும் இதை சட்டமாக்குவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் தற்போதுள்ள பாராளுமன்றில் அத்தகைய பெரும்பான்மை உள்ள கட்சி ஒன்றுமே இல்லை.

கேள்வி: தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தைப்பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: நான் கொழும்பில் வாழ்ந்தாலும் வடபகுதியோ மலையகமோ அப்பகுதி மக்களுக்கு பிரச்சினையானால் குரல் கொடுக்க என்றும் தயங்கியதில்லை. இம்முறை ஆயிரம் ரூபா சம்பளக்கோரிக்கை தேசிய ரீதியாக எழுச்சி பெற்று சர்வதேசத்தையும் சென்றடைந்து இவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று இருந்த போது துரதிர்ஷ்டவசமாக அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டு அவர்களின் போராட்ட வேகத்தில் மந்த கதி ஏற்பட்டது.

அந்த அரசியல் நெருக்கடி ஏற்பட்ட தருணத்தில் அதற்கான தீர்வும் கிடைத்த சந்தர்ப்பத்தில் இந்த பிரச்சினையை தமிழ் முற்போக்குக்கூட்டணி சரியான முறையில் தீர்த்திருக்கலாம்.ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் கதிரையில் அமர வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  மட்டுமே அவர்கள் அக்கறை செலுத்தினார்கள்.  

கேள்வி: போதைப் பொருள் கடத்தல் மற்றும் அது தொடர்பான செயற்பாடுகளுக்கு எதிராக ஜனாதிபதி முன்னெடுத்திருக்கும் செயற்பாடுகள் பற்றி?

பதில்: அதை வரவேற்கிறேன். இன்று எமது நாடு சிக்கிக்கொண்டிருக்கும் அரசியல் ,பொருளாதார பிரச்சினைகளில் இதுவும் கொழுந்து விட்டெரிகிறது. அதை கட்டுப்படுத்த ஜனாதிபதி எடுத்திருக்கும் சில முடிவுகள் எமது நாட்டின் சுபீட்சத்துக்கு வழிவகுக்கும். எமது சந்ததியினரை பாதுகாக்க சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகவுள்ளது. வன்னி மற்றும் அதை அண்டிய கடற்பிராந்திய பகுதிகளிலேயே போதை பொருட்கள் எமது நாட்டிற்குள் அதிகமாக ஊடுருவுவதாகக்கூறப்படுகிறது. ஆகவே இதை தடுப்பதற்கு சகல வழிகளிலும் எனது ஒத்துழைப்பை வழங்குவேன்.

நேர்காணல் : சிவலிங்கம் சிவகுமாரன்