இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் படையினரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 44 பேர் ஏற்கனவே பலியாகியுள்ள நிலையில் அங்கு தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து மேஜர் பதவியில் உள்ள இராணுவ அதிகாரியொருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீரீல் ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியான நவ்ஷேரா செக்டர் பகுதி பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ளது. 

இந்த பகுதியில் வெடிகுண்டு புதைக்கப்பட்டிருப்பதாக படையினருக்கு தெரியவந்ததையடுத்து, அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளில் சிலவற்றை செயலிழக்கச் செய்யும் பணியில் இராணுவம் ஈடுபட்டபோது, அதில் ஒரு குண்டு வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மேஜர் பதவியில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒரு இராணுவ வீரர் படுகாயம் அடைந்துள்ளார்.