மகாராஷ்டிராவில் பப்ஜி கேம் விளையாடிய போது சார்ஜ் தீர்ந்ததால், ஆத்திரமடைந்த இளைஞர் , தங்கைக்கு நிச்சயிக்கப்பட்டவரைக் குத்தியுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்கள் ஒன்லைன் விளைாயட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். குறித்த ஒன்லைன் கேம்கள் பெரியவர்கள் , சிறியவர்கள் என அனைத்து வயதினரையும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் அடிமையாக்கியும் உள்ளது.

மகாராஷ்டிராவின் கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினீஷ் ராஜ்பாய் தனது கையடக்க தொலைபேசியில்  பப்ஜி  விளையாடிக் கொண்டிருந்தார். தொடர்ந்து விளையாடவே, கையடக்க தொலைபேசியில் சார்ஜ் வேகமாக குறைந்து , செயலிழந்துவிட்டது. விளையாட்டில் தீவிர முனைப்புடன் இருந்த குறித்த நபர்  கையடக்க தொலைபேசியின் சார்ஜரை தேடியுள்ளார். 

வீடெங்கும் தேடியதில், அந்த சார்ஜர் அறுந்த நிலையில் இருப்பதைக் கண்டார். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான ரஜினீஷ் , தனது சகோதரிதான் இவ்வாறு செய்திருப்பார் என நினைத்து அவரிடம் சண்டை இட்டுள்ளார். அப்போது அவரது சகோதரி தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஓம் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். 

இதனையடுத்து ரஜினீஷ்க்கும் ஓமிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் கைகலப்பாகியது. இதனால் ஆத்திரமடைந்த ரஜினீஷ் , அருகிலிருந்த கத்தியினால் , ஓமின் வயிற்றில் குத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

பொலிஸார் ரஜினீஷின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். கத்தியால் குத்தப்பட்ட  ஓம் அருகிலுள்ள வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பப்ஜி என்பது மிகவும் ஆபத்தான ஒன்லைன் மல்டிபிளேயர் விளையாட்டு ஆகும். இதில் 100 வீரர்கள் போர்க்களத்தில் போராட வேண்டும். இதில், ஒருவர், இருவர், நால்வர் என எண்ணிக்கையில் அணி அணியாக சேர்ந்து விளையாடலாம். இறுதியாக உயிர்தப்புபவர் வெற்றி பெறுவார்.