புத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் விஷேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட கடற்படையினர், சந்தேகத்திற்கு இடமான இயந்திர படகு ஒன்றை சோதனை செய்த போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி கடல் அட்டைகள், முட்டைகள் மற்றும் சிங்கி இறால் என்பனவற்றுடன் டிங்கி இயந்திர படகு உள்ளிட்ட பொருட்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள், முட்டைகள் மற்றும் படகு உள்ளிட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கற்பிட்டி குதிரமலை கடற்பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரம் இன்றி, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று வெள்ளிக்கிழமை இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.