(எம்.எப்.எம்.பஸீர்)

தூக்கத்திலிருந்த தனது மனைவியை அசிட் வீசி கணவன் கொலை செய்த சம்பவம் தெற்கின் கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது காயமடைந்த அவர்களது 7 வயது மகள் கம்புருபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவதாக பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம்  நேற்று 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

தனது இளைய மகளுடன் 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கம்புறுபிட்டிய - போலகே வத்த, ரன்கெக்குலாவ பகுதியில் உள்ள தனது வீட்டில் அறையொன்றில் தூக்கத்திலிருந்துள்ளார்.

இதன்போது அங்கு  குறித்த பெண்ணின் கணவர் மற்றொரு நபருடன் வந்து மனைவி மற்றும் மகள் மீது அசிட் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனால் காயமடைந்த தாயும் மகளும் முதலில் கம்புறுபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தாய் மட்டும் மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். 

காயமடைந்த மகள் கம்புறுபிட்டிய வைத்தியசாலையில் வைத்து பொலிசாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில், தனது தந்தை மற்றொரு நபருடன் இரவில் வந்து இந்த அசிட் வீச்சை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில் குறித்த நபரைக் கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.