(செய்திப்பிரிவு)விடுதலைப்புலிகள் மற்றும் யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் ஆகியோருக்கு எதிராக வழக்குகள் காணப்படுகின்றன. இவை அனைத்துமே 2015 ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட அரசாங்கத்தினாலேயே முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறான வழக்குகளை தொடர்ந்து கொண்டிருக்க முடியாது. நாம் உண்மையை பேசி, கவலையைத் தெரிவித்து மன்னிப்பு கோரி ஏனைய விடயங்களை முன்னெடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றை பயன்படுத்தாமலிருப்பது சிறந்ததல்ல. வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாவிட்டால் அதனை அரசாங்கத்திடம் கையளியுங்கள். தென் மாகாண சபை நிதி ஒதுக்குமாறு கோரி அடிக்கடி எம்முடன் முரண்படுகின்றனர். தென் மாகாண சபை எதிர்கட்சியாக காணப்பட்ட போதிலும் இவ்வாறான விடயங்களை முன்னெடுக்கின்றனர். தொடரப்பட வேண்டிய வழக்குகள் அனைத்தும் இரு தரப்பிலும் தொடரப்பட்டுள்ளன. தற்போது உண்மையைக் கூறி மன்னிப்புக் கோரி அவற்றை நிறைவு செய்வதே வெற்றியாகும். கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரும் பாதுகாப்பு துறையினரே அனைத்து சேவைகளிலும் ஈடுபட்டிருந்தனர். எதிர்வரும் பத்து வருடங்களுக்குள் இந்த பிரச்சினைகள் அனைத்தும் நிறைவுக்கு வரும். இரு தரப்பினருக்கும் என்ன நடந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்படும். அனைத்தையும் மன்னித்து ஏற்று நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாட்டை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. நாட்டில் பல கடன் சுமைகள் காணப்படுகின்றன. விஷேடமாக வடக்கை கட்டியெழுப்ப  வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதனை சீர்குலைக்க முடியாது. காரணம் எமக்கிடையில் நல்லிணக்கம் காணப்படுகின்றது. எனவே நாம் பயமின்றி இவற்றுக்கு முகங்கொடுத்து சிறந்தவொரு பயணத்தை முன்னெடுக்க வேண்டும். தமிழ், சிங்களம் முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.