Published by R. Kalaichelvan on 2019-02-15 14:28:21
(நா.தனுஜா)
தெற்காசியப் பிராந்திய நாடுகளிலே இலங்கை வலுவானதொரு பொருளாதார நிலைமையை கொண்டுள்ள போதிலும், அதனால் அடையக்கூடிய சாத்தியமான பொருளாதார மேம்பாட்டை இன்னமும் அடையவில்லையென உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை அபிவிருத்தி குறித்த தகவல்கள் அடங்கிய உலக வங்கியின் அறிக்கை வெளியிடும் நிகழ்வு நேற்று கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் உரையாற்றிய உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியக் கிளையின் பிரதித் தலைவர் ஹர்ட்விங் சேபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதாரத்தில் இலங்கையால் அடைய முடியுமான சாத்தியமான பொருளாதார வளர்ச்சியினையினை அடைவதற்கு நிதிக்கொள்கையின் மீதுள்ள அழுத்தங்களைத் தகர்க்க வேண்டியுள்ளது.
செலவுகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு அரசாங்கத்திற்கு சொந்தமான சில நிறுவனங்கள் அதிக நட்டத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், சமூகம் சார்ந்த துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதனை உறுதிசெய்ய வேண்டும்.
இந்நிலையில் உலக வங்கி இலங்கைக்கும் தொடர்ந்தும் உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளதுடன்,குறித்த சில துறைகளில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் அனுசரணைகளை வழங்கவுள்ளது.அத்தோடு வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிப்பதிலும் உதவிகளை வழங்க எதிர்பார்க்கின்றது என்றார்.