தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி 94 ஓட்டங்களுடன் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்க அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் இன்று டர்பனில் ஆரம்பமாகிய மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன களத்தடுப்பை தெரிவுசெய்தார்.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரக்க அணி 59.4 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸிக்காக பெற்றது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நேற்றை முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 49 ஒட்டங்களை பெற்றிருந்தது.

இந் நிலையில் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பிக்க 49 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி 59.2 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றது.

திமுத் கருணாரத்ன 30 ஓட்டத்தையும், லஹுரு திரிமன்ன எதுவித ஓட்டமின்றியும், ஒசத பெர்ணான்டோ 19 ஓட்டத்துடனும், குசல் மெண்டீஸ் 12 ஓட்டத்துடனும், குசல் பெரேரா 51 ஓட்டத்துடனும், நிரோஷன் திக்வெல்ல 8 ஓட்டத்துடனும், தனஞ்சய டிசில்வா 23 ஓட்டத்துடனும், சுரங்க லக்மால் 4 ஓட்டத்துடனும், லஷித எம்புலுதெனிய 24 ஓட்டத்துடனும், கசுன் ராஜித 12 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறியதுடன், விஷ்வ பெர்ணான்டோ எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் ஸ்டெய்ன் 4 விக்கெட்டுக்களையும், பிலேண்டர், ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், ஒலிவர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

இதனால் 44 ஓட்ட முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி சற்று முன்னர் வரை 3 விக்கெட்டுக்களை இழந்து 83 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், 138 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.

தென்னாபிரிக்க அணி சார்பில் மர்க்ரம் 28 ஓட்டத்துடனும், அம்லா 16 ஓட்டத்துடனும், பவுமா 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் ஆடுகளத்தில் டுப்பிளஸ்ஸி 10 ஓட்டத்துடனும், எல்கர் 35 ஒட்டத்தடுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.