அமெரிக்க இந்து-பசுபிக் கட்டளையகம் (U.S.Indo-Pacific Command – INDOPACOM) கிழக்கு மாகாண சிறார்களின் கல்விக்கான வாய்ப்புகளை கட்டியெழுப்பும் வகையில், நிந்தவூர் மற்றும் சூடைக்குடா பிரதேசங்களில் இரண்டு பாடசாலைகளை புனரமைப்பு செய்துள்ளது.

 நிந்தவூரில் பெப்ரவரி 12 ஆம் திகதி நடைபெற்ற நாடா வெட்டும் உத்தியோகப்பூர்வ நிகழ்வுக்கு அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவு தலைமை அதிகாரியான எந்தனி ரென்சூலி தலைமை தாங்கிய அதேநேரம், பொது அலுவலகள் அதிகாரி டேவிட் மெக்குயார் சூடைக்குடாவிலுள்ள பாடசாலையை பெப்ரவரி 14 ஆம் திகதி திறந்து வைத்தார். 

கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ.எம். ஹிஸ்புல்லா, சுகாதரா, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ. முத்துபண்டா, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஷாம் மற்றும் வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் சூடைக்குடா பாராதி பாடசாலையின் அதிபர் சிவசுப்பிரமணியம் கிருபாதாஸ் ஆகியோரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.

கிராமிய மற்றும் கீழ்நிலை சமூகங்களுக்கு நேரடியாக நன்மை பயக்கும் இந்த நிர்மாணத்திட்டங்களில் INDOPACOM 190 மில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதுடன், உள்ளூர் அபிவிருத்திக்கு உதவியளித்தும் கிழக்கு மாகாண இலங்கை இளைஞர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்துக்கு பங்களிப்பு செய்தும் உள்ளூர் பாடசாலை நிர்வாக அதிகாரிகளையும் இந்த நிர்மாணப் பணிகளில் பங்காளர்களாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

அல் மஸார் பெண்கள் உயர்நிலை பாடசாலையில் INDOPACOM நிர்மாண திட்டமானது 12 வகுப்பறைகளையும் 35,000 லீற்றர் மழைநீர் சேகரிப்பு முறைமையொன்றையும் 17 மேலதிக குளியலறை கூடங்களையும் அமைத்துள்ளது. அல் மஸார் பெண்கள் உயர்நிலை பாடசாலையானது 1170 மாணவர்களுக்கு உதவுகிறது. “இலங்கை இளைஞர்கள் கற்பதற்கான, ஆய்வு செய்வதற்கான மற்றும் சவால் விடுப்பதற்கான வாய்ப்பொன்றை இந்த பாடசாலை பிரதிநிதித்துவப் படுத்துகிறது.

இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இந்த வாய்ப்புகளை வழங்குவது குறிப்பாக முக்கியமாகும்,” என்று ரென்சூலி தெரிவித்தார். “இலங்கையின் எதிர்கால பெண் தலைவர்களுக்கு இந்த உதவிகளை எம்மால் வழங்க முடிந்ததையிட்டு நான் சந்தோசமடைகிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சூடைக்குடா பாடசாலையில் 5 புதிய வகுப்பறைகளையும் 35,000 லீற்றர் மழைநீர் சேகரிப்பு முறைமையொன்றையும் நிர்மாணிப்பதற்கு INDOPACOM நிதியளித்துள்ளது. இந்த வகுப்பறை கட்டிடமானது இயற்கை அனர்த்த நிலைமையின் போது உள்ளூர் குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடமொன்றை வழங்கும் அவசர இருப்பிடமொன்றையும் மேல் மாடியில் கொண்டுள்ளது. 

இந்த திட்டமானது அங்கவீனமுற்றோரும் பயன்படுத்தக்கூடிய 10 கூடங்களுடன் கூடிய புதிய கழிவறை தொகுதியொன்றையும் உருவாக்கியுள்ளது.

“இலங்கை மக்களுடன் நீண்டகாலம் நீடித்து நிலைக்கும் பங்காண்மையை கட்டியெழுப்புவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அடையாளப்படுத்துவதாக இந்த பாடசாலை திட்டங்கள் அமைந்துள்ளன,” என்று மெக்குயார் தெரிவித்தார். “கற்பதற்கு பாதுகாப்பானதும் தரமானதுமான இடங்களை அடைவதற்கான வழிகளை மேம்படுத்துவதன் மூலம் இளம் இலங்கையர்களை வலுவூட்டுவதானது அனைவருக்கும் சம உரிமைகள் மற்றும் சம வாய்ப்புகளை உறுதிபடுத்த பணியாற்றும் இலங்கை அரசாங்கத்துடன் எவ்வாறு நாம் உடன் நிற்கிறோம் என்பதற்கான ஒரு உதாரணமாகும். நாளைய தலைவர்கள் இன்று இங்கு கல்வி கற்கின்றனர். நாம் இருதரப்பினரும் பங்காளர்களாக ஒன்றிணைந்து பணியாற்றும் போது நாம் எவ்வளவு மேலும் அடைய முடியும் என்பதை அவர்கள் பார்க்கிறார்கள் என்பது எமது நம்பிக்கையாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த புனரமைப்புகளானது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் உறுதியானதும் நீடித்ததுமான பங்காண்மையை எடுத்துக்காட்டுவதுடன், எதிர்காலத்தில் இலங்கையுடன் நெருக்கமான நட்புறவொன்றை தொடர்வதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.