(ப.பன்னீர்செல்வம் – ஆர். ராம்)

கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை மீள சீனாவிடம் கையளிப்பதற்காக ஐ.தே.க. முக்கியஸ்தர் ஒருவர் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை பணமாக பெற்றுக் கொண்டுள்ளார் என இன்று சபையில் குற்றம் சாட்டிய ஐ.ம.சு.முன்னணி எம்.பி மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி. மஹிந்த ராஜபக்ஷ சம்பூர் உடன்படிக்கையை இந்தியாவுடன் கையெழுத்திட்டது பிழையென்றால் ஏன் அந்தப் பிழையை நீங்கள் தொடருகின்றீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். 

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மின்சார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரனை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 

சீனாவின் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தை எமது ஆட்சியில் முன்னெடுத்த போது எதிர்த்தீர்கள். 

ஊழல் மோசடிகள் என்றீர்கள். ஆனால் இன்று 33 ஏக்கரை அதிகமாக சீனாவுக்கு வழங்கி 99 வருட கால குத்தகைக்குத் திட்டத்தை சீனாவுக்கு வழங்கியுள்ளீர்கள். அத்தோடு இத்திட்டம் பல காலங்கள் இடைநிறுத்தப்பட்டு சீன நிறுவனத்துடன் நீண்ட “டீல்” களை நடத்திய ஐ.தே.கட்சி முக்கியஸ்தர் ஒருவர் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை தரகுப்பணமாக பெற்றுக் கொண்டுள்ளார் என்றார்.