இரு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் துப்பாக்கியினால் சரமாரியாக பிரயோகம் செய்ததினால் ஒருவர் பலியானதுடன் மேலுமொருவர் ஆபத்தான நிலையில் தனமல்விலை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குற்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தனமல்விலை பகுதியின் போகாஹன்திய என்ற இடத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்ட நால்வரும் இனந்தெரியாதவர்களென்றும் அவர்கள் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுவிட்டு அம் மோட்டார் சைக்கிள்களிலேயே தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தனமல்விலைப் பொலிசார் தெரிவித்தனர்.

இனந்தெரியாதவர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தினால் பலியானவர் இரு கொலைகளின் பிரதான சந்தேக நபரென்றும் கொலைக்குற்றச்சாட்டப்பட்ட இவர் பிணையில் விடப்பட்டிருந்த  42 வயது நிரம்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையாவாரென்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தினால் பலியான நபர் குறித்த ஸ்தல மஜிஸ்ரேட் நீதிபதி விசாரணைகளை வெள்ளவாயா மஜிஸ்ரேட் நீதிபதி மாலினி தென்னக்கோன் மேற்கொண்டு சட்ட வைத்திய பரிசோதனைக்கென்று சடலத்தை மொனராகலை அரசினர் மருத்துவமனை பிரேத அறைக்கு அனுப்புமாறு நீதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

மேற்படி துப்பாக்கிப் பிரயோகத்தினால் படுகாயமுற்ற தனமல்விலையைச் சேர்ந்த 22 வயது நிரம்பிய நபர் தொடர்ந்தும் தீவிரி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து  தனமல்விலைப் பொலிசார் தொடர்ந்தும் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன்,கொலையாலிகளைத் தேடும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.