மின்சார மின் இணைப்பு கம்பியில் சிக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தியா  - தமிழகத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன்  ஹைதராபாத் நகரில் அறுந்து கிடந்த மின்சார மின் இணைப்பு கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் ஹைதராபாத்தின் நர்சிங்கி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம்  தொடர்பாக வெளியாகியுள்ள சி.சி.டி.வி காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைக்கும் வகையில் உள்ளது. 

இந்நிலையில், குறித்த  சி.சி.டி.வி காட்சியில், மக்கள் குடியிருப்பு பகுதியில் வீடுகள் முன்பாக சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாக பலரும் வந்து செல்கிறார்கள்.

அப்போது, சிறுவன் ஒருவன் ஓடி வந்து, வீட்டின் முன்பு இருந்த மின்விளக்கு கம்பத்தை விளையாட்டாக தொடுகிறார். 

தொட்ட உடனே அசைவின்றி அப்படியே இருக்கிறான். சில நிமிடங்கள் எவ்வித அசைவும் குறித்த சிறுவனிடம் இல்லை. ஒரு கை மட்டும் கம்பத்தில் பிடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சிறுவன் அசைவின்றி இருக்கும் நேரத்தில் பலரும் அந்தப் பாதையில் கடந்து செல்கிறார்கள். அருகிலேயே மற்ற சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சில நிமிடங்கள் அப்படியே அசைவின்றி இருந்து பின்னர் அந்தச் சிறுவன் கம்பத்தின் அருகில் சரிந்து விழுகின்றார்.

பின்னர் தான் மற்றவர்கள் அருகில் வந்து பார்க்கிறார்கள். அப்பொழுதுதான், மின் கம்பத்தில் அறுந்து கிடந்த மின் இணைப்பு கம்பியில் கால் பட்டு அந்தச் சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது தெரியவந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.