கேப்பாபுலவு நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயோதிப தாய் ஒருவர் போராட்ட இடத்திலிருந்து நேற்று வீதிக்கு செல்ல முற்பட்ட வேளை தலைசுற்றி கீழே விழுந்த நிலையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

711 ஆவது நாளாக (11)  நேற்று படையினர் அபகரித்துள்ள காணியினை விடுவிக்க கோரி தோடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்கள் வயோதிப நிலையிலும் காணி மீட்பு போராட்டத்தில் முனைப்புடன் செயற்பட்டு வந்த கேப்பாபுலவினை சேர்ந்த 64 வயதுயுடைய அழகம்மா என்ற ஆரோக்கிய நாதன் எலிசபேத் அம்மா என்பவரே தலைச்சுற்றி கீழே விழுந்துள்ளார்.

 இந்நிலையில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

வயது முதிர்ந்த நிலையிலும் சொந்த வாழ்விடங்களில் வாழமுடியாத நிலையிலும் தள்ளாடும் வயதிலும் பூர்வீக நிலத்திற்காக தொடர்ச்சியாக போராட்டத்தில் பங்கெடுத்து தனது சொந்த நிலத்திற்கு எப்போது செல்வோம் என்ற ஏக்கத்தவிப்பில் வாழ்ந்து வந்த நிலையில் இந்த தாயாருக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.