மட்டக்களப்பில் மாணவன் ஒருவரைப் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16 வயதுடைய குறித்த மாணவன் ஒரு மில்லிகிராம் அளவிலான கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று பிற்பகல் 2 மணியளவில் மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

குறித்த மாணவன் இந்த வருடம் கா.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும், அவருடைய வீட்டிற்கு அருகில் உள்ள கஞ்சா வியாபாரி ஒருவரிடம் இருந்து கஞ்சாவைப் பெற்று தனது நண்பர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மாணவன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.  

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.