தேசிய பாடசாலைகளில் தரம் 1 க்கான அனுமதியில் முறைகேடுகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரணைசெய்வதற்கு கல்வியமைச்சு குழுவொன்றை நியமித்திருக்கிறது.

கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக தலைமையிலான இந்த குழு  மாணவர்களை அனுமதிப்பதில் உகந்த நடைமுறையைக் கடைப்பிடிக்கத்தவறியமை, பொருத்தமான பாடசாலைகளை மாணவர்கள் தெரிந்தெடுக்க இயலாமல்போன சந்தர்ப்பங்கள், அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்களின் ஆவணங்கள் தொடர்பில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் நேர்காணல் செய்த சபைகள் அனுமதி தொடர்பில் உகந்த நடைமுறைகளைப் பின்பற்றத்தவறியமை போன்ற பல விவகாரங்களை ஆராயும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

முறைப்பாடுகளில் உண்மை இருக்குமானால் அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு அனுமதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சின் உயரதிகாரியொருவர் கூறினார். நேர்காணல் சபையின் நடவடிக்கைகளில் தவறுகள் கண்டுபிடிக்கப்படுமாயின் அதற்கெதிராகவும் கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.