இந்து மத நடவடிக்கைளை தேசிய, மாவட்ட மட்டங்களில் கூட்டிணைக்கும் நோக்கில் ‘இலங்கை தேசிய இந்து மகாசபை’ என்ற பொறிமுறை உருவாக்கப்படும். இது ஆங்கிலத்தில் ‘நேஷனல் ஹிந்து கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா’ என்று அழைக்கப்படும் எனத் தெரிவித்த இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், இதற்குள் ஒரு தேசிய வழிநடத்தல் குழு அமைக்கப்படும் எனவும் கூறினார். 

அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் இலங்கை தேசிய இந்து மகாசபையின் மாவட்ட குழுக்கள் அமைக்கப்படும். இதைத்தவிர மத விவகாரங்கள் தொடர்பில் அமைச்சருக்கு ஆலோசனைகள் வழங்க இந்து அறிவோர் சபை என்ற பொறிமுறையும் உருவாக்கப்படும். 

இந்து மதகுருமார்கள், இந்து ஆலய அறங்காவலர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், இந்து சைவ மத மன்றங்கள்-இளையோர் சங்கங்கள் என்ற நான்கு தூண்களை கொண்டு எனது பணிகளை இந்து சமய விவகார அமைச்சர் என்ற முறையில் நான் முன்னெடுப்பேன் எனவும் குறிப்பிட்டார்.