எங்களது வீரர்களிடம் தவறுகள் இல்லை. வீரர்களை ஆட்ட நிர்ணயத்துக்குட்படுத்தியும், அவர்கள‍ை பணத்துக்கு அடிபணிய வைத்தும் குழப்புவது நிர்வாகமே ஆகும் என சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், 

21 ஆம் திகதி நாம் இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் தேசிய அணியின் பொறுப்பை எனக்குத் தருவதாக கூறியுள்ளனர். 

கிரிக்கெட்டில் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். சில வீரர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடும். 

எனினும் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடக்கூடிய, நாட்டை நேசிக்கின்ற, பணத்தை மாத்திரம் நோக்கமா கொண்டு செயற்படாத வீரர்களை உருவாக்க வேண்டும் என்பது எனது தேவையாக காணப்படுகின்றது.

எங்களது வீரர்களிடம் தவறுகள் இல்லை. வீரர்களை ஆட்ட நிர்ணயத்துக்குட்படுத்தியும், அவர்கள‍ை பணத்துக்கு அடிபணிய வைத்தும் குழப்புவது நிர்வாகமே ஆகும். 

இந்த நிர்வாகத்தில் நீடிக்கின்ற அனைவரும் சூதாட்டக்காரர்கள். இவ்வாறான சூதாட்டக்காரர்களை அகற்றும் பட்சத்தில் சிறந்த கிரக்கெட் வீரர்களை உருவாக்க முடியும். அது தொடர்பில் எனக்குப் பாரிய பொறுப்பு இருக்கின்றது என்றார்.