வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தினை சரியான பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் பெரும் சர்ச்சைக்கு மத்தியில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையமானது 50 கடைகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை கேள்விகோரல் மூலம் வழங்க கிராமிய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையில் வவுனியாவில் இதுவரை காலமும் மொத்த மரக்கரி வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் 35 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கிய பின்னர் ஏனைய கடைகளை கேள்வி கோரல் மூலம் வழங்க வேண்டும் என வவுனியா மாவட்ட அரசியல்வாதிகளும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந் நிலையில் வவுனியாவில் நகரசபைக்குட்பட்ட மரக்கரி மொத்த வியாபார நிலையத்தில் கடைகள் பெற்ற பலரும் அதனை வாடகைக்கு கொடுத்துள்ள நிலையில் மரக்கறி மொத்த வியாபாரத்தில் நீண்ட காலமாக கடை உரிமையாளர்கள் பலர் ஈடுபடவில்லை.

இதனால் பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை தற்போது வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என வவுனியா மாவட்ட சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடைகளையும் தற்போதைய கடை உரிமையாளர்களுக்கே வழங்கும் பட்சத்தில் அதனை அவர்கள் மீண்டும் வாடகைக்கு கொடுக்கும் நிலை ஏற்படும் இதன் காரணத்தால் தற்போது வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் மீண்டும் வாடகைக்கு பெற்று தொழிலில் ஈடுபடவேண்டி இருப்பதனால் பொருளாதார மத்திய நிலைய கடைகளை மரக்கறி மொத்த வியாபார நிலையத்தின் கடை உரிமையாளர்களுக்கு வழங்குவதை தவிர்த்து தற்போது வியாபாரத்தில் ஈடுபடுபடுபவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.