(நா.தினுஷா)

ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களுடன் ஒன்றிணைந்த வகையில் புதிய ஜனநாயக தேசிய முன்னணி விரைவில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதனூடாக ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீன தன்மையினை பாதுகாத்து சுதந்திரமான சமூகமொன்றை உருவாக்குவோம் எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கான புதிய தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுக்கு நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில்,  

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் ஆறு தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் ஏனைய அனைத்து அமைப்பாளர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை முறையாக  நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை முறையாக நடைமுறைப்படுத்துவதில் தவறு இழைப்பார்களானால் அவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.