முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட 7 பேருக்கு எதிராகச் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கக் கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என பிரதிவாதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவைக் கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி நிர்மாணிப்பு குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என விடுக்கப்பட்ட கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் குறித்த ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது.

கடந்த அரசாங்கத்தின் போது, மெதமுலன - வீரகெட்டிய பிரதேசத்தில், டீ.ஏ.ராஜபக்‌ஷ அரும்பொருட் காட்சியகத்தை நிர்மாணிப்பதற்காக, அரச நிதியை  தவறான முறையில் பயன்படுத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, கோட்டாபய உள்ளிட்ட எழுவருக்கு எதிராக, சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல்  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.