விமான விபத்தில் உயிரிழத்ந எமிலியானோ சலாவின் உடல் மீட்கப்பட்ட நிலையில், விமானியைத் தேடும் பணிகளுக்காக பிரபல கால்பந்தாட்ட வீரர் கைலன் மப்பே 27000 பவுண்களை வழங்கியுள்ளார். 

அர்ஜென்டினாவைச் சேர்ந்த எமிலியானோ சலா. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, வேல்ஸ் நாட்டின் கார்டிப் கிளப் அணி சமீபத்தில் வாங்கியது. கடந்த ஜனவரி 19 அன்று  கார்டிப் நகரில் இதற்கான ஒப்பந்தத்தில் எமிலியானோ கையெழுத்திட்டார். பின்னர் பிரான்ஸ் திரும்பிய எமிலியானோ சலா, கடந்த ஜனவரி 21 மாலை ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். 

அதன்போது சானல் தீவுகளுக்கு அருகே திடீரென அவரது விமானம் மாயமானது. விமானத்தில் பயணம் செய்த எமிலியானோ மற்றும் விமானி குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. 

இதையடுத்து எமிலியானோ சலாவின் உடல் கடந்த 7 ஆம் திகதி கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் விமானி டேவிட் இபோட்சன் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இதனையடுத்து தேடுதல் பணியில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காணாமல் போன விமானியை தேடும் பணிகளுக்காக பிரான்ஸ் கால்பந்து வீரர் கைலன் மப்பே 27000 பவுணை நிதியுதவியாக வழங்கியுள்ளார். 

அத்துடன் இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் கேரி லிங்கர் 1000 பவுண்டு வழங்கி உள்ளார்.