தமிழ் மக்களது அரசியல் உரிமை மற்றும் அபிவிருத்திசார் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நிலையான வழிமுறைகள் எம்மிடம் இருக்கின்றன. ஆனாலும் அதை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்கள் எமது கரங்களுக்கு இதுவரை வழங்காதிருப்பதே எமது மக்கள் இன்று எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கும் அவலங்களுக்கும் காரணமாக அமைகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சண்டிலிப்பாய் மத்தி இளங்கதிர் சனசமூக நிலைய வருடாந்த ஆண்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் உரையாற்றுகையில்,

நாம் இன்று எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை தொடர்ந்தும் எமது அடுத்த சந்ததியினருக்கும் விட்டுச் செல்லமுடியாது. தீர்வுகாணப்படாது தொடர்ந்துவரும் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை எமது காலத்திலேயே நாம் காணவேண்டும். தென்னிலங்கை அரசுடனும் மக்களுடனும் எமக்குள்ள நல்லுறவின் காரணமாக எமது மக்களின் தீரா பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான வழிமுறையை முன்னெடுத்து அதை வெற்றிகொள்வதற்கான பொறிமுறை எம்மிடம் உள்ளது.

கடந்த காலங்களில் பல அழுத்தங்களையும் உயிர் அச்சுறுத்தல்களும் எமக்கு இருந்தபோதிலும் அவற்றை எல்லாம் கண்டு நாம் அச்சமடையாது, ஒதுங்கி ஓடி ஒழியாது எமது மக்களின் பாதுகாவலர்களாக  மக்களுடன் இருந்து அவர்களுக்கான தேவைப்பாடுகள் அனைத்தையும் பெற்றுக்கொடுத்து இன்று எமது மக்கள் சிறந்ததொரு நிலையில் வாழ்வதற்கான வழிவகைகளை செய்து கொடுத்தவர்கள் நாங்கள்.

அந்தவகையில் காலம் தொடர்ந்தும் ஒரே மாதிரியாக இருக்கப்போவதில்லை. நிச்சயமாக இனிவரும் காலத்தில் எமது கைகளுக்கு அரசியல் அதிகாரத்தை மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் எமக்கு கிடைக்குமானால் வெகு விரைவில் எமது மக்கள் கண்டுவரும் இன்னல்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது மட்டுமல்லாது தமிழ் மக்களில் அரசியல் உரிமைகளையும் எம்மால் வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையும் எம்மிடம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது சிறப்பு விருந்தினர்களுடன் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் வலிகாமம் தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் ஜீவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.