கம்பளை அட்டபாகை தோட்டம் உள்ளிட்ட பிரதேசங்களில் இரவு வேளைகளில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதுடன் பாலியல் துஷ்பிரயோக முயற்சி மற்றும் திருட்டுச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சுமார் 11 சம்பவங்கள் அட்டபாகை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்ற மக்கள் உயரமான இடங்களையும் இலகுவில் தாவிச் செல்லக்கூடிய நான்கு நபர்களைக் கொண்ட மர்மக் குழுவே இவ்வாறான அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருதாகத் தெரிவிக்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பாக இதுவரை கம்பளை பொலிஸ் நிலையத்தில் மூன்று முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதோடு தோட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

மர்ம நபர்கள் தோட்டத்திற்குள் பிரவேசிக்கும் தருணத்தில் திடீரென மின்சாரம் தடைப்படுவதுடன் மீண்டும் அதிகாலை வேளையில் மின் இணைப்பு கிடைப்பதாகவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கூரைகள் மற்றும் ஜன்னல் வழியாகவும் உட்புகும் குறித்த நபர்கள் தாம் குறிவைக்கும் நபர்களின் மீது ஏதோ ஒருவகைப் புகையினை உபயோகிப்பதால் குறிவைக்கப்படும் நபர்களுக்கு சில விநாடிகளுக்கு சத்தமிட முடியாமல் தொண்டை அடைத்து விடுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மயக்க நிலை அடைவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இறுதியாக சில தினங்களுக்கு முன்னர் 12 வயது சிறுமியை குறித்த நபர்கள் வல்லுறவிற்கு உட்படுத்த முற்பட்ட வேளை குறித்த சிறுமியால் சத்தமிட முடியாமல் திணறியதையடுத்து சிறுமியின் தந்தை விழித்துக் கொண்டமையினால் குறித்த நபர்கள் தம்பி ஓடியுள்ளனர்.

உயரமான இடங்களையும் இலகுவாகத் தாவக்கூடிய வலிமையுடைய சுமார் நான்கு பேரடங்கிய குழுவினரே மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு நேரங்களை அச்சத்துடனேயே கழிக்க வேண்டியுள்ளதாக கூறும் இத்தோட்ட மக்கள் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பாக தோட்ட நிர்வாகமும் பொலிஸாரும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களின் போது தங்கச் சங்கிலி மற்றும் பெறுமதிமிக்க கையடக்க தொலைபேசிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

தற்போது மேற்படி தோட்ட இளைஞர்கள் குழுக்களாக இணைந்து இரவு நேரங்களில் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி மர்ம நபர்கள் தொடர்பில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.