இந்தியாவின் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த பல மாதங்களாக மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, எதிர்வரும் திங்கள்கிழமை (11ம் திகதி) தலைநகர் டில்லியில், பிரதமர் மோடிக்கு எதிராக ஒருநாள் போராட்டம் நடத்தவுள்ளதாக நாயுடு அறிவித்துள்ளார். 

இதற்காக, தென் மத்திய ரயில்வேயிடமிருந்து 20 பெட்டிகளுடன் கூடிய இரண்டு ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இந்த ரயில், நாளை (10ம் திகதி)  அனந்தபுரம் மற்றும் ஸ்ரீகாகுளம் ஆகிய இடங்களில் இருந்து டில்லிக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளன. 

'மத்திய அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், அந்த ரயில்கள் மூலம் டில்லி வரலாம்' என சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.