19 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக திருத்தவேண்டும் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கவேண்டும். இந்த ஆட்சியில் புதிய அரசியலமைப்பு வராது. அரசியலமைப்பு நிர்ணய சபையை நிறுவியமை தவறானது. மைத்திரிபால, கோத்தபாய வேட்பாளருக்கு தகுதியானவர்கள். கூட்டமைப்பு மக்களின் பிரச்சினைகளை பேசுவதில்லை. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் தவறு என்று நான் தற்போது கருதுகின்றேன். எனவே 19 ஆவது திருத்தத்தை மீண்டும் திருத்தவேண்டும். அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது இந்த சட்டத்தினால் நாட்டை கொண்டுசெல்ல முடியாது நிலைமை ஏற்பட்டது என்று பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். 

செவ்வியின் முழு விபரம் வருமாறு,

கேள்வி : 51 நாள் அரசியல் மாற்றம் தோல்வியடைய காரணம் என்ன?

பதில் : அது திட்டமிடலின்றி உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும். ஜனாதிபதி வெறுமனே அரசாஙகம் ஒன்றை மாற்றுவதற்காக தீர்மானம் எடுப்பவர் அல்ல. புதிய அரசாங்கத்தில் 113 பேர் இருக்கின்றனர் என அவருக்கு நம்பிக்கை வழங்கப்பட்டிருக்கலாம். நான் அது தொடர்பில் ஜனாதிபதியிடம் கேட்டேன். அப்போது பெரும்பான்மை பலம் அந்த தரப்பில் இருப்பதாகவே கூறப்பட்டது.

எனவே பெரும்பான்மை பலம் தம்மிடம் இருப்பதாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட உறுதியானது சரியானதல்ல. இரண்டாவது விடயமாக 113 பேர் இருந்தாலும் அதில் சிலர் வேறு காரணங்களுக்காக விலகிச் சென்றனர். பதவிகளை பெற்றவர்கள் கூட மறுபக்கத்துக்கு சென்றனர். காரணம் என்னவென்று நாம் பேசாமல் இருப்பதே நல்லதாகும்.

கேள்வி : 113 இருக்கின்றது என்ற நம்பிக்கையை ஜனாதிபதிக்கு யார் கொடுத்திருப்பார்கள்?

பதில் : கட்டாயமாக கூட்டு எதிரணியே அதனை வழங்கியிருக்கவேண்டும். வேறு யாரும்  அப்போது அதனை வழங்கியிருக்க முடியாது. ஜனாதிபதிக்கு நம்பிக்கையிருந்திருக்காவிடின் அவர் இதனை வழங்கியிருக்கமாட்டார். மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் வழங்கிய உறுதிப்பாட்டிலேயே இது முன்னெடுக்கப்பட்டிருக்கும்.

கேள்வி : சட்டத்தின்படி பார்த்தால் இந்த நடவடிக்கை சரியானதா?

பதில் : இது சட்டப்பிரச்சினை அல்ல. உண்மையில் என்னிடம் இது தொடர்பில் ஆலோசனை கேட்டிருந்தால் நான் அதற்கு சரியான வழியை கொடுத்திருப்பேன். 2004 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவுக்கு அன்று இருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முறையை சொல்லிக்கொடுத்தோம். அதனால் 2004 ஆம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு சென்றோம். இந்த விடயத்தை வேறு முறையில் செய்திருக்கலாம். அதாவது மஹிந்த ராஜபக்ஷ தரப்பிடம் 113 பேர் கூறப்பட்டபோது அவர்கள் அனைவரையும் ஒரு இடத்துக்கு அழைத்து பிரதமர் உட்பட அமைச்சர்களை நியமித்திருந்தால் யாருக்கும் வழக்கு போட்டிருக்க முடியாது. நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்திருக்கவும் முடியாது. என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தால் சரியான முறையில் அதனை செய்திருக்கலாம்.

கேள்வி : எனினும் அப்போது கூட 113 என்ற இலக்கம் இருந்ததா என்று தெரிந்திருக்காதே?

பதில் : அது 113 பேர் உள்ளதாக வாக்குறுதியளித்த தரப்பினருக்கே தெரியும்.

கேள்வி : நீங்கள் ஏன் 51 நாள் அரசாங்கத்தில் அங்கம் வகித்தீர்கள்?

பதில் : நான் அப்போது பாரிய அழுத்தத்தில் இருந்தேன். கிடைக்கின்ற எந்த சந்தர்ப்பமாக இருந்தாலும் அதனை பயன்படுத்தி நாட்டை பாதுகாக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருந்தேன். ஒக்டோபர் 23 ஆம் திகதியும் நான் அமைச்சரவையில் முரண்படவேண்டியேற்பட்டது. அரசாங்க தரப்பினர் விவசாய மக்களின் காணிகளை இல்லாமலாக்கும் சட்டமூலங்களை கொண்டுவர முயற்சித்தனர். பாரிய தோட்டங்களை வர்த்தகர்களுக்கு வழங்க முற்பட்டனர். கொழும்ப துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க முற்பட்டனர். இதனை அமைச்சரவையில் கூறினர். அவ்வாறு அந்த அரசாங்கம் நீடிக்க இடமளிக்க முடியாத நிலை காணப்பட்டது. . ஆனால் அது என்னால் செய்ய முடியாது. எனவே யாராவது அரசாங்கத்தை கவிழ்க்கவேண்டும் என்று கருதியதால் ஜனாதிபதியுடன் இணைந்துகொண்டேன்.

கேள்வி : ஒக்டோபர் 26 ஆம் திகதியாகும்போது சந்தர்ப்பம் ஒன்று கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்தீர்களா?

பதில் : எனக்கான சந்தார்ப்பத்தை நான் பார்த்துக்கொண்டிருக்கவில்லை. அரசாங்கத்தின் பயணம் நிற்கவேண்டும் என்று கருதினேன். நாட்டைப் பற்றி சிந்தித்தே இதனை நான் எண்ணினேன்.

கேள்வி : 51 நாள் அரசியல் மாற்றத்தில் உங்கள் தரப்பினால் ஏன் 113 பெற முடியவில்லை?

பதில் : எமது பக்கம் வந்து பதவி பெற்றவர்கள் கூட பின்னர் மறுபக்கம் சென்றனர். சென்றமைக்கான காரணம் மக்களுக்கு தெரியும். 

கேள்வி : தற்போதைய ஜனாதிபதியை பதவிக்கு கொண்டுவர பங்களிப்பை வழங்கினீர்கள். அவ்வாறான நீங்கள் ஏன் நல்லாட்சி அரசை விட்டு வெ ளியேறவேண்டும்?

பதில் : நான் இல்லாவிடின் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராகியிருக்கமாட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் 75 வீதமானோர் மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக களமிறக்க விரும்பவில்லை. ரணில் விக்ரமசிங்கவும் விரும்பவில்லை. சஜித் பிரேமதாசவும் எதிர்த்தார்.

அப்போது நான் செயற்குழுவில் நீண்ட உரையை நிகழ்த்தினேன். ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரினால் வெற்றிபெற முடியாது என்றும் பொது வேட்பாளரை களமிறக்கவேண்டும் என்றும் எடுத்துக்கூறினேன். அவ்வாறு நான் நிலைமையை விளக்கி நீண்ட உரையை நிகழ்த்தினேன். அப்போது 75 வீதமானோர் கைதட்டினர்.

ஆனால் ரணில் விக்ரமசிங்க கூட்டம் முடியுமுன்னர் வெளியேறினார். ஆனால் பின்னர் நிலைமை மாறியது. அரசாங்கம் அமைத்த பின்னர் அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் குறித்து நான் பல தடவைகள் பேசினேன். அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்கவேண்டும் என்று சந்திரிகாவின் காலத்தில் சீனாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய மூவரில் நானும் ஒருவன். 2005 ஆம் ஆண்டு மே மாதம் நானும் அப்போதைய துறைமுக அமைச்சர் மங்கள மற்றும் வெ ளிவிவகார அமைச்சர் அனுர பண்டாரநாயக்க ஆகியோரும் சீனாவுக்கு சென்று பேச்சு நடத்தினோம். 390 மில்லியன் டொலரில் இதனை நிர்மாணிக்க யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் மஹிந்தவின் அரசாங்கத்தில் சீனா அதனை மாற்றி நிலத்தை தோண்டி துறைமுகத்தை நிர்மாணித்தது. 1500 மில்லியன் டொலரில் இது கட்டப்பட்டது. அதனால் நாடு சிக்கியது.

ஆனால் துறைமுகத்தை நிர்மாணித்த நிறுவனம் 35 வருடங்கள் இதில் செயற்பட்டு தமது நிதியையும் இலாபத்தையும் எடுத்துக்கொண்டு செல்ல முன்வந்தது. அரசாங்கத்துக்கு 790 மில்லியன் வழங்கவும் அந்த நிறுவனம் முன்வந்தது. அதற்கு இந்த அரசாங்கம் இணங்கவில்லை. ஆனால் தற்போது வந்துள்ள நிறுவனத்துக்கு 1100 மில்லியன் டொலர்களுக்கு 99 வருடங்களுக்கு துறைமுகத்தை கொடுத்தது.

இதன் பாரதுரத்தன்மை குறித்து எவருக்கும் தெரியவில்லை. கொழும்பு  துறைமுகத்தின் மீள் ஏற்றுமதி 75 வீதமாகும். அங்கு வரும் நிறுவனங்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துவிட்டால் பின்னர் கொழும்பு துறைமுகமே நீச்சல் தடாகமாக மாறிவிடும். அதனால்தான் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வெ ளியேறினேன்.

கேள்வி ; எனினும் பின்னர் மீண்டும் பிரதமர் ரணிலுடன் ஏன் இணைந்துகொண்டீர்கள்?

பதில் : சில மாதங்கள் சென்றதும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் உட்பட பலர் என்னை வந்து பணியாற்றுமாறு கோரினர். நான் ஏற்கவில்லை. 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதியும் பிரதமரும் என்னை அழைத்து கோரிக்கை விடுத்தனர். அப்போது பல்கலைக்கழகத் தொகுதி பாரிய ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது. நான் அதனை 24 மணிநேரத்தில் மாற்றி யமைத்தேன். 

கேள்வி: மீண்டும் ஏன் 51 நாள் அரசாங்கத்தில் இணையவேண்டிய அவசியம் ஏற்பட்டது?

பதில்: நான்போகவில்லை. என்னை வருமாறு அழைத்தனர். ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்று சென்றேன். மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நான் செயலாற்றும் விதம் குறித்து தெரியும். எனவே கல்வி, உயர் கல்வி அமைச்சைப் பொறுப்பேற்றேன். மாறாக பதவி வகிப்பதில் எனக்கு எந்த இலாபமும் இல்லை.

கேள்வி: அடுத்துவரும் 12 மாதங்களில் உங்கள் பார்வை எவ்வாறு இருக்கிறது?

பதில்: நாடு ஒரு ஸ்திரமற்ற நிலையை நோக்கி பயணிக்கிறது. சில துறைகள் அராஜகத்தை நோக்கி பயணிக்கின்றன. பொருளாதார, சமூக, அரசியல் அழுத்தங்கள் ஏற்படும் காலப்பகுதியாகும்.

கேள்வி: காரணம் என்ன?

பதில்: இது தேர்தல் வருடமாகும். ஆறு மாகாணசபைகளுக்கு ஒருவருடமாக தேர்தல் நடத்தவில்லை. அதனூடாக மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் நடைபெறவேண்டும். தற்போது அரசியல் கட்சி முறைமையிலும் மக்களுக்கு நம்பிக்கையில்லாமல் போயுள்ளது. அரசியலமைப்பின் 15 ஆவது திருத்தம் ஊடாக கொண்டுவரப்பட்ட விடயம் கொள்கை அரசியலை கேள்விக்குறியாக்கியுள்ளது. தற்போது இனவாத அரசியலே நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றது. இனவாதம் இல்லாத கட்சியொன்று தலைதூக்குவது கடினமாகும். அதற்கு ஏற்றவகையிலேயே சட்டம் உருவாக்கப்படுகின்றது. அதாவது 12.5 சதவீத வாக்குகளை பெற்றால்தான் ஒரு ஆசனத்தை பெறமுடியும் என்ற சட்டம் ஐந்துவீதமாக குறைக்கப்பட்டு திருத்தப்பட்டது. அதுவே இந்தப் பிரச்சினைக்கு காரணமாக அமைந்தது.

சிறிய கட்சிகள் உருவாகுவதில் தவறில்லை. ஆனால் தற்போது இனவாதக்கட்சிகளே உருவாகின்றன. வடக்கில் தமிழ் கட்சிகள் உருவாகின்றன. கிழக்கில் தமிழ், மற்றும் முஸ்லிம் கட்சிகள் உருவாகின்றன. தெற்கில் சிங்கள கட்சிகள் உருவாகின்றன.

கேள்வி: 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவேண்டும். பல்வேறு வேட்பாளர்கள் குறித்து பேசப்படுகின்றது. உங்களுடைய பார்வை எவ்வாறு உள்ளது?

பதில்: அனைத்து இலங்கையர்களையும் அரவணைத்து நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான அரசியல் சூழலை உருவாக்கும் ஊழலற்ற தீர்க்க தரிசனமான ஒருவரை நானும் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

கேள்வி: அவ்வாறான ஒருவர் இல்லையா?

பதில்: இதுவரை இல்லை. இல்லை என்று கூறுவதைவிட இருக்கின்றார்கள் என்று கூறலாம் ஆனால் வெளியில் வராமல் இருக்கின்றார்கள். நாம் அவர்களை தேடவேண்டும். மாணிக்கக்கற்களை மண்ணைத்தோன்றி கஷ்டப்பட்டுத்தான் எடுக்கவேண்டும். நெல்சன் மண்டேலா, டி.எஸ். சேனாநாயக்க, காந்தி, போன்ற தலைவர் எமக்கு தேவைப்படுகின்றார்கள்.

கேள்வி: தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என சுதந்திரக்கட்சியினர் கூறுகின்றனர். உங்களின் கருத்து என்ன?

பதில்: அது ஒப்பீட்டு ரீதியில் பார்க்கப்படவேண்டிய விடயம். அவரினால் வெற்றிபெற முடியுமா இல்லையா என்பது எதிரணியில் போட்டியிடும் வேட்பாளரைப் பொறுத்தே அமையும். அதற்கு ஒரு உதாரணத்தைக் கூறுகின்றேன். எமது நாட்டில் தலைவர்கள் வேண்டுமென்று வாக்களித்த சந்தர்ப்பங்கள் குறைந்தளவிலேயே காணப்படுகின்றன. 1947 ஆம் ஆண்டு டி.எஸ். சேனாநாயக்க, 1956 இல் பண்டாரநாயக்க, 2010 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ, ஆகியோர் தேவையான தலைவர்கள் என வாக்களிக்கப்பட்டது. ஏனைய அனைத்த தேர்தல்களிலும் இருப்பவரை விரட்ட வேண்டும் என்பதற்காகவே மக்கள் வாக்களித்தனர். 

கேள்வி: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால்?

பதில்: அவர் அதற்கு தகுதியானவர். 2015 இல் மைத்திரிபால சிறிசேனவை தவிர வேறுயாராலும் வெற்றிபெற்றிருக்க முடியாது. இம்முறையும் அவரே தகுதியானவர். ஆனால் அவர் ஒரு இடத்தில் சறுக்கிவிட்டார். அவர் ஜனாதிபதி ஆகியதும் சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றார்.

அந்த இடத்திலிருந்து நிலைமை மாற்றம் கண்டது. ஆனால் அதனை அவர் தவித்திருக்கவும் முடியாது. ஆனால் அவர் நினைத்திருந்தால் கட்சியின் யாப்பை திருத்தி தலைமைப்பதவியை யாருக்காவது கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் கடந்த காலங்களில் செய்யப்பட்ட தவறுகளுக்கு தண்டனை வழங்கியிருக்கலாம்.

கேள்வி: கோத்தபாய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடும் நகர்வில் ஈடுபடுவதாக தெரிகிறது. அதுதொடர்பில் ?

பதில்: அது தொடர்பில் நான் இன்னும் முழுமையாக கருத்து கூற முடியாது. ஆனால் அவருக்கு அரசியல் கட்சி என்று ஒன்றில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானத்திலேயே அது தங்கியுள்ளது. ஆனால் கூட்டு எதிரணியிலும் பொதுவான இணக்கப்பாடு இருப்பதாக தெரியவில்லை.

எனவே கோத்தபாயவுக்கு வேட்பாளராக முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் அவர் போட்டியிட்டாலும் எதிரணியில் யார் போட்டியிடுகின்றார் என்பதை வைத்தே அவரின் வெற்றியை தீர்மானிக்க முடியும். கோத்தபாய ராஜபக்ஷ அரச அதிகாரியாக செயலாற்றியவர். அவர் நாட்டை நேசிப்பவர். அவர் மீதும் சில விமர்சனங்களும் உள்ளன ஆனால் மக்கள் அவரின் தலைமைத்துவத்தை விரும்புகின்றனர்.

கேள்வி: இந்த ஆட்சிக்காலத்தில் அரசியல் தீர்வு என்பது சாத்தியமாகுமா?

பதில்: இவ்வருடத்தில் பெரிய தீர்க்கமான விடயங்கள் எதுவும் பாராளுமன்றத்தில் நிறைவேறாது.

கேள்வி: புதிய அரசியலமைப்பு ?

பதில்: புதிய அரசியலமைப்பும் வராது. அது தெளிவாக தெரிகிறது. இது நடைபெறாது என்பது அரசாங்கத்திற்கும் தெரியும். ஆனால் நாங்கள் இதற்காக கஷ்டப்படுகின்றோம் என்பதை காட்டுவதற்காக நிபுணர் குழு என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர். இதனால் இனவாதம் பரப்பப்படுகின்றது. நிபுணர் குழு அறிக்கை என்று கூறி மேலும் தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரிக்கின்றனர். அதனூடாக தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று எண்ணுகின்றனர். ஆனால் அது அப்படி நடைபெறாது.

கேள்வி: அப்படியாயின் அரசியல் தீர்வு?

பதில்: அரசியல்தீர்வு என்றால் முதலில் என்னவென்று பார்க்கவேண்டும். நீங்கள் வல்வெட்டித்துறைக்கு சென்று ஏழை மனிதர் ஒருவருடன் பேசினால் அவருக்கு பல பிரச்சினை இருக்கும் இதே பிரச்சினை மொனராகலையில் இருப்பவருக்கும் இருக்கும். அந்தப் பிரச்சினை என்னவென்று வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை.

கேள்வி: அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வொன்று அவசியம்தானே.

பதில்: அதிகாரத்தைப் பகிர்வது பிரச்சினையான விடயமல்ல. பண்டாரநாயக்க, 1956 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பிரதமராக முதலாவது முறை உரையாற்றியபோது பெல்ஜியத்தை உதாரணம் காட்டி நாட்டு சபைகள் தொடர்பில் பேசினார். அதிகாரங்களை கீழ்மட்டத்திற்கு எவ்வாறு பகிர்வது என்று கூறினார். பண்டாரநாயக்க இதனை அன்றே தீர்க்க தரிசனமாக கூறியவர். ஆனால் ஒரு இடத்தில் அவர் சறுக்கினார்.

அதாவது மொழி பிரச்சினை விடயத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டது. அவர் அன்று கூறியது போன்று அந்த நாட்டு சபை முறைமையை கொண்டுவந்திருந்தால் இந்த பிரச்சினை நீடித்திருக்காது. ஜப்பானில் நகரசபைகளுக்கு எமது நாட்டில் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு, அரசியல்வாதிகள் வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை. அதிகாரங்களை கேட்கின்றனர். வடக்கில் இன்று மிகப்பெரிய பிரச்சினையாக போதைப் பொருள் பிரச்சினை காணப்படுகின்றது. அதனைத் தடுக்க தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்தனர்.

கேள்வி: அவர்கள் பாராளுமன்றத்தில் பேசுகின்றனர் அல்லவா? வேறு எதனையும் செய்வதற்கு அதிகாரம் இல்லையே?

பதில்: ஏன் அதிகாரம் இல்லை என் கூறுகின்றீர்கள். அவர்கள் பிரதேச அரசியல்வாதிகள். அங்குள்ள நிறுவனங்களுடன் இணைந்து இதனைத் தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். பாதாள உலகமோ, அல்லது போதைப்பொருள் வியாபாரமோ மூன்று மாதங்களுக்கே அதன் ஆயுட்காலமாகும். மூன்று மாதங்கள் தாண்டியும் அவை இயங்குமாயின் அங்கு அரசியல்வாதிகள், அல்லது அரச அதிகாரிகளின் கரம் இருக்கும் என்றே அர்த்தம். எப்படி இருப்பினும் அரசியல் தீர்வொன்று அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.

கேள்வி: 51 நாள் அரசியல் நெருக்கடியின் போது கூட்டமைப்பு வகித்த வகிபாகம் என்ன?

பதில்: தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமக்கான சலுகைகள், உரிமைகளுக்காக ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்படுகின்றது. தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுப்பதற்காக அல்ல.

கேள்வி: அரசியலில் தொடர்ந்து இருக்கும் எண்ணம் இருக்கின்றதா?

பதில்: நான் அரசியலுக்கு திட்டமிட்டு வந்தவன் அல்ல. நான் சந்திரிக்காவின் அரசில் எம்.பி.யாகவே இருந்தேன். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலும் முதலில் எம்.பி.யாகவே இருந்தேன். பின்னர் அரச வங்கிகள் அமைச்சராக செயற்பட்டேன். ஆனால் சிறிது காலத்தின் பின்னர் அந்த அரசியலிருந்தும் வெளியேறிவிட்டேன். அதன் பின்னர் 2015ஆம் ஆண்டுதான் அமைச்சுப் பதவியை ஏற்றேன். நாட்டை நேசிக்கின்ற ஒருவர் வந்தால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவேன். இல்லாவிடின் எனது சட்டத்தொழில்துறையில் ஈடுபடுவேன்.

கேள்வி: அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை கொண்டுவர நீங்கள் பாரிய பங்களிப்பை வழங்கினீர்கள் அல்லவா?

பதில்: நான் இல்லாவிடின் 19 வந்திருக்காது.

கேள்வி: அதில் நீங்கள் தவறு செய்துவீட்டீர்கள் என்று கருதுகின்றீர்களா?

பதில்: அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் தவறு என்று நான் தற்போது கருதுகின்றேன். ஆனால் 19 இல் தவறில்லை. அதிகாரங்களை பயன்படுத்தும் நபர்களிலேயே பிரச்சினை உள்ளது.

கேள்வி: எவ்வாறு?

பதில்:சுயாதீன ஆணைக்குழுக்கள், எதிர்பார்ப்பதைப் போன்று செயற்படவில்லை. சில ஆணைக்குழுகள் காரணமாக நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எனவே 19 மீண்டும் திருத்தவேண்டும். அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது நாட்டை கொண்டுசெல்ல முடியாது நிலைமை ஏற்பட்டது. உயர் நீதிமன்றத்திற்கு சென்று அனைத்தையும் தீர்ப்பதாயின் பாராளுமன்றத்தின் உயர் தன்மைக்கு என்ன அர்த்தம்?

கேள்வி: அப்படியாயின் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கவேண்டும் என்கிறீர்களா?

பதில்: கட்டாயம் இருக்கவேண்டும். அதனால்தான் நான் 19ஆவது திருத்த சட்டத்தில் 33/2 பிரிவை இணைத்தேன். அதனை மேலதிகமாகவே நான் இணைத்தேன். இதுபோன்றதொரு நெருக்கடி நிலையின்போது ஜனாதிபதிக்கு இதுபோன்றதொரு அதிகாரம் இருக்கவேண்டும் என்பதற்காகவே இதனை இணைத்தோம். இல்லாவிடின் நாட்டை கொண்டு செல்ல முடியாது.

கேள்வி: எனினும் இதனை நீங்கள் தெளிவாக 19 இல் அந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தீர்களா?

பதில்: தெளிவாக உள்ளது. அதாவது ஜனாதிபதி தன்னிச்சையாக ஜனாதிபதி முடிவெடுக்கக்கூடாது. எனினும் தேவைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கோட்பாடே இங்கு பிரயோகிக்கப்பட்டது. நிறைவேற்று அதிகாரமும் சட்டவாக்கமும் மோதினால் நாட்டை கொண்டுசெல்ல முடியாது. உலகில் பல நாடுகளிலும் உரிய காலத்திற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது. எனவே 19 ஐ மீண்டும் நிச்சயமாக திருத்தவேண்டும். திருத்துவதைவிட புதிய அரசியலமைப்பை கொண்டுவரவேண்டும். ஆனால் தற்போது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அரசியலமைப்பு நிர்ணயசபை உருவாக்கப்பட்டமை தவறானதாகும். அதற்கு சட்டத்தில் இடமில்லை.

கேள்வி: 2016 ஆம் ஆண்டு ஏன் இதனை நீங்கள் கூறவில்லை. 

பதில்: நான் அதனை எடுத்துக்கூறினேன். எனினும் இதனூடாக ஏதாவது நல்லது நடக்கும் என்று நான் நம்பினேன். நாட்டுக்கு நல்லது நடக்குமாயின் எந்தவழியில் சென்றாவது இதனை செய்யலாம் என்று நான் கருதினேன். தற்போதைய அரசியலமைப்பில புதிய அரசியலமைப்பை உருவாக்கவதற்காக அரசியலமைப்பு நிர்ணயசபையை நிறுவும் ஏற்பாடு எதுவும் இல்லை. மாறாக அது தடை செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்தே புதிய அரசியலமைப்ப நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மேலும் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க ஆறுமாதகாலம் போதும்.

- நேர்காணல் – ரொபட் அன்டனி