நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

அக்லெண்டில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலாவதாக துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை குவித்தது.

159 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணியின் ஆரம்ப வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

இதனால் இந்திய அணி 9 ஓவர்களின் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 79 ஓட்டங்கள‍ை குவித்தது. ஆடுகளத்தில் ரேகித் சர்மா 50 ஓட்டத்துடன் தவான் 26 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

எனினும் 9 ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் ரோகித் சர்மா 29 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஓட்டம் 3 நான்கு ஓட்டம் அடங்களாக 50 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, அவரையடுத்து தவானும் 10.5 ஆவது ஓவரில் 30 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக விஜய் சங்கர் மற்றும் ரிஷாத் பந்த் ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடிவர இந்திய அணி 12.3 ஓவரில் 100 ஓட்டங்கள‍ை பெற்றது.

இதையடுத்து 13.4 ஆவது பந்தில் விஜய் சங்கர் 14 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க தோனி களமிறங்கி ரிஷாத் பந்துடன் கைகோர்தாடிவர இந்திய அணி 17.1 ஆவது பந்தில் 150 ஓட்டங்களை பெற்றது.

இறுதியாக  18.5 ஓவரில் நியூஸிலாந்து அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் கடந்தது.

ஆடுகளத்தில் தோனி  19 ஓட்டத்துடனும், ரிஷாத் பந்த் 40 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் லொக்கி பெர்க்ஷன், இஷ் சோதி, டாரல் மிட்செல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் இவ்விரு அணிகளும் 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி எமில்டனில் இடம்பெறவுள்ளது.