(நா.தினுஷா) 

வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கென 10 பில்லியன் ரூபா கடன் உதவியினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். 

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 

வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களின்  எண்ணிக்கை கடந்த காலங்களில் அதிகரித்துள்ளது. சொந்தமான வீடுகளை நிர்மாணித்து கொள்வதற்காகவும் தனது வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் தேவை எழுந்துள்ளதாலேயே இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை நாடிச்செல்வதற்கான தேவை எழுந்துள்ளது. 

ஆயினும் அவர்களின் எதிர்பார்ப்புக்களை போன்று தேவைகள் நிறைவு செய்யப்படுவதில்லை. அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்வதற்காகவே வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களுக்கென தனியாக கடன் உதவிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த கடன் திட்டத்தினூடாக 10 பில்லியன் ரூபா பெற்றுக்கொடுக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பிலும்  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.