இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ரொஷ் டெய்லர் மற்றும் கிரேண்ட்ஹோம் ஆகியோரின் சிறப்பான இணைப்பாட்டத்தால் நியூஸிலாந்து அணி 158 ஓட்டங்களை குவித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டியை நியூஸிலாந்து அணி 80 ஓட்டங்களினால் வெற்றி கொண்டுள்ள நிலையில், இரண்டாவது போட்டி இன்று காலை 11.30 க்கு ஒக்லெண்டில் ஆரம்பமானது. 

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

முதலாவதாக ஆடுகளம் நுழைந்து துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியமையினால் நியூஸிலாந்து அணி 7.5 ஓவரில் 50 ஓட்டங்கள் எடுத்த நிலையில் 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்து திணறியது.

அதன்படி டிம் செய்பர்ட் 12 ஓட்டத்துடனும் முன்ரோ 12 ஓட்டத்துடனும், டாரல் மிட்செல் ஒரு ஓட்டத்துடன் சர்ச்சைக்குரிய முறையிலும், வில்லியம்சன் 20 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

தொடர்ந்து நான்காவது விக்கெட்டுக்காக கிரேண்ட்ஹோம் மற்றும் ரொஷ் டெய்லர் ஜோடி சேர்ந்தாட நியூஸிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை விக்கெட் இழப்பின்றி அதிகரிக்க ஆரம்பிக்க 15 ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 121 ஆக அதிகரித்தது.

கிரேண்ட்ஹோம் 47 ஓட்டத்துடனும், டெய்லர் 24 ஓட்டத்துடனும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வர கிரேண்ட்ஹோம் 15.3 ஆவது பந்தில் 27 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஓட்டம் ஒரு நான்கு ஓட்டம் அடங்கலாக அரைச்சதம் பெற்று, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

அவரின் வெளியேற்றத்தையடுத்து மிச்செல் சாண்டனர் களமிறங்கி துடுப்பெடுத்தாட நியூஸிலாந்து அணி 16.3 ஆவது ஓவரில்  150 ஓட்டங்களை எட்ட 18 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் டெய்லர் 42 ஓட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 159 ஓட்டங்களை நிர்ணயித்தது. 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் குருனல் பாண்டியா மூன்று விக்கெட்டுக்களையும், கலில் அஹமட் 2 விக்கெட்டுக்களையும், புவனேஸ்வர் குமார், ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.