இங்கிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில் கிறிஸ் கெய்ல் இடம்பிடித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது மேற்கிந்தியத் தீவுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.  

இதேவேளை இவ்விரு அணிகளுக்கிடையோயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

இந் நிலையில் இத் தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த வீரரான கிறிஸ் கெய்ல் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அத்துடன் இருபதுக்கு 20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிக்கோலஸ் பூரன் ஒருநாள் போட்டிக்கான அணியில் முதன் முறையாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

39 வயதாகும் கிறிஸ் கெய்ல் 284 ஒருநாள் போட்டிகளில் 23 சதம், 49 அரைசதங்களுடன் 9727 ஓட்டங்களை குவித்துள்ளார். 

இறுதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பங்களாதேஷிக்கு எதிராக விளையாடினார். அதன்பின் தற்போதுதான் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.

இவ் விரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.