(ப. பன்னீர்செல்வம், ஆர். ராம்)

மலையக மக்களுக்கு மலசலக்கூடம் அமைப்பதற்கு காணியில்லை. ஆனால் மதுபானசாலைகள் அமைப்பதற்கு ஒவ்வொரு தோட்டங்களிலும் காணிகள் வழங்கப்பட்டுள்ளது என நேற்று சபையில் குற்றம்சாட்டிய ஐ.தே.கட்சி பதுளை மாவட்ட எம்.பி. வடிவேல் சுரேஷ் பைத்தியக்கார வைத்தியசாலைகளில் பைத்தியக்காரர்களை தூங்க வைப்பதற்கு வழங்கப்படும் மாத்திரைகளை ‘‘கள்ளில்” கலந்து மலையக மக்கள் திட்டமிட்டு இன அழிப்பு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே வடிவேல் சுரேஷ் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

  யுத்தம் இல்லாமையே மலையக மக்கள் இன்று காணியில்லாமல் வாழ்கின்றனர். மலசலக் கூடமொன்றை நிர்மாணித்துக் கொள்வதற்கு காணி பெற்றுக் கொள்வதற்கும் மலையக மக்கள் சிரமப்படுகின்றனர்.

ஆனால் ஒவ்வொரு தோட்டங்களிலும் மதுபானசாலைகள் அமைப்பதற்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களை இலக்கு வைத்து இன அழிப்பை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு மலையகத்தில் மதுபானசாலைகள் தலையெடுத்துள்ளது.

பதுளையில் ஒவ்வொரு தோட்டங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் மதுபானசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் மலையக சமூகம் சீரழிவுக்கு உள்ளாகியுள்ளது.

சிங்கள, முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களிலோ அல்லது நகரங்களிலோ கிராமங்களிலோ இல்லாத வகையில் மலையகத்தில் மதுபானசாலைகள் திறக்கப்படுகின்றன.

பதுளை, நுவரெலியா, கண்டி உட்பட மலையகத்தில் மதுபானசாலைகள் அதிகம் உள்ளன.

இது மலையக மக்களை இலக்கு வைத்த இன சுத்திகரிப்பே என எண்ணத் தோன்றுகிறது.

அதேவேளை, மலையகத்தில் விற்பனை செய்யப்படும் கள்ளில் பைத்தியக்கார வைத்தியசாலைகளில் பைத்தியக்காரர்களை தூங்க வைப்பதற்காக வழங்கப்படும் மாத்திரைகள் கலக்கப்படுகிறது என்றும் வடிவேல் சுரேஷ் எம்.பி. தெரிவித்தார்.