இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 6 பொலிஸார் உள்ளிட்ட 10 பேரை மீட்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு கடந்த சில நாட்களாக நிலவுகிறது. இந் நிலையில் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை அண்டியுள்ள ஜவஹர் சுரங்கத்தில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த பனிச்சரிவில் அங்கு இருந்த பொலிஸ் நிலையமும் சிக்கியுள்ளது. பனிச்சரிவு  ஏற்படும் போது பொலிஸ் நிலையத்திலிருந்த 20 பேரில் 10 பேர் பாதுகாப்பாக தப்பியுள்ளதுடன், ஏனைய 6 பொலிஸார் உட்பட 10 பேர் பனிச் சரிவில் சிக்கிக் கொண்டனர். 

பனிச்சரிவில் சிக்கிய 10 பேரையும் மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதுடன், ஜம்மு காஷ்மீரில் உள்ள 22 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.