அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர்,  ஒரு இலட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களை  கொடுத்து அபூர்வ வகை ஆட்டை வேட்டையாடிய சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், காஷ்மீர், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற பனிமலைப் பிரதேசங்களில், நீண்ட ரோமங்கள் மற்றும் சுருள் சுருளான கொம்புகளை உடைய மார்கோர் எனும் ஒருவகை அபூர்வ ஆடுகள் உள்ளன. இந்த ஆடுதான் பாகிஸ்தான் நாட்டின் தேசிய விலங்காகும். 

பன்னாட்டு உயிரின பாதுகாப்புச் சங்கம், இந்த ஆடுகள் மிகவும் அரிய விலங்கினங்களின் பட்டியலில் வைத்துள்ளது. இந்த ஆட்டை வேட்டையாடுவது பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், போட்டிகளுக்காக வேட்டையாடுவதை அந்த நாடு அங்கீகரிக்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள கில்ஜித் பகுதியில் மார்கோரை வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற அமெரிக்காவைச் சேர்ந்த பிரயான் ஹர்லான் என்பவர், சாசி லார்மோஸ் இன மக்கள் அதிகமாக வசிக்கும் சாசி என்ற கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் மார்கோர் ஆட்டை வேட்டையாடினார்.

இந்த ஆட்டுக்காக அவர், கில்ஜித் - பலுசிஸ்தான் வனத்துறைக்கு சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ( 19,541,340.50 இலங்கை ரூபா ) கட்டணமாகச் செலுத்தியுள்ளார். இதுதான், பாகிஸ்தானில் அனுமதிக்கப்பட்ட வனவிலங்கு வேட்டையில் ஒருவர் கட்டிய அதிகப்படியான தொகையாகும்.

முன்னதாக, கடந்த ஜனவரி 21 ஆம் திகதி மற்றொரு அமெரிக்கரான டயானா கிறிஸ்டோபர் அந்தோனி என்பவர் 1 இலட்சத்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கட்டணமாக செலுத்தியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.