அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பெண்களுக்கான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியொன்றில் தென் அவுஸ்திரேலியன் அணியானது 10 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

அவுஸ்திரேலியாவல் பெண்களுக்கான உள்ளூர் இருபதுக்கு 20 போட்டித் தொடர் இடம்பெற்று வருகின்றது. இதில் நேற்று இடம்பெற்ற ஆட்டமொன்றில் தென் அவுஸ்திரேலியன் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதின.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் அவுஸ்திரேலியன் அணி வீராங்கனைகள் நியூ சவுத் வேல்ஸ் அணியின் வீராங்கனையான ரோக்சனா வான்-வீனின் பந்து வீச்சுக்களை சமாளிக்க முடியாது 10.2 ஓவர்கள‍ை எதிர்கொண்டு அடுத்தடுத்து ஆட்டமிழந்து அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர்.

தென் அவுஸ்திரேலியன் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையாக களமிறங்கிய பெபி மான்செல் மாத்திரம் தாக்குப் பிடித்து 4 ஓட்டங்களை பெற்றார்.

எனினும் அணியின் ஏனைய வீராங்கனைகள் யாவரும் எதுவித ஓட்டங்களுமின்றி டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தனர். இதேவேளை அணியின் ஏனைய 6 ஓட்டமும் 'வைட்' மூலமாக பெறப்பட்டவையாகும்.

பந்து வீச்சில் நியூ சவுத் வேல்ஸ் அணி சார்பில், அசத்தலாக பந்து வீசிய ரோக்சனா 2 ஓவர்கள் ஒரு ஓட்டத்தை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதையடுத்து 11 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூ சவுத் சேல்ஸ் அணி 2.5 ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றியீட்டியது.