30 ஆண்டுகளுக்கு பிறகு 91ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ஹொலிவூட் திரையுலகின் கௌரவமிக்க விருதாக கருதப்படுவது, ஒஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் குறித்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கும் 91ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா இம்மாதம் 24ஆம் திகதி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. 

2016ஆம் ஆண்டு நடந்த ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை இந்தியாவை சேர்ந்த பொலிவூட் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கினார்.இந்த ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை பிரபல நடிகர் கெவின் ஹார்ட் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஓரின சேர்க்கையாளர் தொடர்பாக அவர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், தான் ஒஸ்கார் விருதுகளை தொகுத்து வழங்கப்போவதில்லை என கெவின் ஹார்ட் அறிவித்துள்ளார். 

இந்த நிலையில், 91ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை ஒளிபரப்பும் ‘ஏபிசி’ நிறுவனம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.