(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாரிய அளவிலான  போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க நான் நடவடிக்கை எடுக்கும் போது எமது மனித உரிமை அமைப்பே எனக்கு தடையாக உள்ளது. 

எனினும் இந்த விடயத்தில் யார் தடுத்தாலும் எந்த நெருக்கடி வந்தாலும் அடுத்த இரண்டு மாதத்தில் மரணதண்டனை சட்டத்தை நிறைவேற்றி குற்றவாளிகளை தண்டித்தே தீருவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

என்னையும் கோத்தாபய ராஜபக் ஷவையும் கொலைசெய்ய முன்னெடுத்த சூழ்ச்சி குறித்து இரண்டு வாரங்களில் உண்மைகள் அம்பலமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி நேற்று பிற்பகல் சபையில் உரைநிகழ்த்தினார். இந்த உரையின் போதே அவர் இந்த காரணிகளை சுட்டிக்காட்டினார். அவர் கூறுகையில்,

நேற்று பாராளுமன்றத்தில் ( நேற்றுமுன்தினம் ) பாரிய நிதி மோசடி விசாரணை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்ககுழு அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது. 

இதன்போது கடந்த ஆட்சியின் பாரிய ஊழல் மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குற்றவாளிகள் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்த போதிலும் நான் அவர்கள் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறினார்கள். 

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பாரிய நிதிமோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் இரண்டுமே ஒரே சந்தர்ப்பத்தில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 

அதேபோல் ஒரு மாத்ததிற்கு முன்னர் மேலுமொரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நான் அமைத்தேன். கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரையில் இந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராயும் வகையில் அந்த ஜனாதிபதி ஆணைக்குழுவை நான் நியமித்தேன். அதற்கு பின்னர் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது இது குறித்து ஒருசில அமைச்சர்கள் என்னிடம் சில கேள்விகளை கேட்டனர். 

இந்த ஆட்சியில் ஊழலை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டமை ஆரோக்கியமான விடயமாகும். ஆனால் ஏன் கடந்த ஆட்சியில் பாரிய நிதிமோசடிகள் குறித்த உண்மைகளை கண்டறிய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு குறித்து நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேட்டனர். 

எனினும் அந்த விடயத்தில் நான் சரியாக நடவடிக்கை எடுத்தேன். மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை போன்றே கடந்த ஆட்சியில் பாரிய நிதி மோசடி மற்றும் ஊழல் குற்றம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையும் ஒரே தடவையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டேன். 

இது குறித்த அடுத்த கட்டத்தை சட்டமா அதிபர் திணைக்களம் கையாள வேண்டும். அதற்கு நீதி அமைச்சு உள்ளிட்ட உரிய அமைச்சுக்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 

இதற்கு தற்போதைய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள காரணமென நான் கூறவில்லை. அவர் அண்மையில் நியமிக்கப்பட்டர். அதற்கு முன்னர் இருந்தவர்களும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அவர்கள் இவற்றை துரிதப்படுத்த மறந்துவிட்டனர் என்றே கருதுகின்றேன்.  அதேபோல் இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையும் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போதும் கூட அந்த காலகட்டத்தில் மத்தியவங்கி பிணைமுறி ஊழல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பிலேயே அதிகமாக கலந்துரையாடப்பட்டது. 

அதனால் கடந்த ஆட்சியின் பாரிய நிதி மோசடி மற்றும் ஊழல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மறைக்கப்பட்டுவிட்டது. ஆகவே உரிய அமைச்சுக்கள் இவற்றை சரியாக முன்கொண்டுவந்திருக்க வேண்டும். அதற்கும் நான் இப்போதைய நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவை குற்றம் சுமத்தவில்லை. 

அதேபோல் இன்று தவறாளர்களை ஒப்படைத்தல் திருத்த சட்ட விவாதம் இடம்பெற்று வருகின்றது. இதன்போது மரணதண்டனை கைதிகள் குறித்தும் பேசவேண்டும். போதைப்பொருள் கடத்தல், பாரிய குற்றங்கள் தொடர்பில் சிறையில் உள்ள மரணதண்டனை கைதிகள் அனைவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்தினை நான் நெடு நாட்களாக முன்வைத்து வருகின்றேன். 

அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை. பாரிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் முறைமை பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. மின்சாரக் கதிரை மூலமாக, தூக்கு தண்டனை மூலமாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் முறைமை பல நாடுகளில் உள்ளன. நாட்டின் குற்றங்களை தடுக்கவும் நாட்டினை ஒழுக்கமாக கொண்டு நடத்தவும் சமூகத்தை சரியான பாதையில் வழிநடத்தவும் கடுமையான சட்டங்களை கையாள வேண்டும். சமூகத்தை சரியான பாதையில் வழிநடத்த சகல மத கோட்பாடுகளும் வழிகாட்டியாக உள்ளது. அறவழியை போதிக்கின்றது. ஆனால் அவை மட்டுமே போதுமானதல்ல. சட்டங்களும் கடுமையானதாக மாற்றப்பட வேண்டும். 

மரண தண்டனை கைதிகளின் விபரங்களை நான் நீதி அமைச்சிடம் கேட்டபோது உரிய நேரத்தில் அவை எனக்குக் கிடைக்கவில்லை. அவை பிற்போடப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளை காப்பாற்றுவதில் கடத்தல்கார கும்பல்களின் தலையீடுகள் இருந்திருக்க வேண்டும்.  

அறிக்கை எனக்கு ஜனவரி மாதம் கிடைத்தது. ஆனால் அந்த அறிக்கையில் பல முரண்பாடுகள் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட குற்றவாளிகளை போல நீதிமன்றத்திற்கு அனுப்பாத கைதிகளின் பெயர்களும் உள்ளது. அதுவே கால தாமதத்திற்கு காரணமாக இருக்கும். இன்று இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குறித்த சகல வியுகங்களும் வகுக்கப்படும் கேந்திரமாக வெலிக்கடை சிறைச்சாலையே காணப்படுகின்றது. ஆகவே வெலிக்கடை சிறையில் உள்ள பாரிய போதைப்பொருள் குற்றவாளிகளை பூசா சிறைக்கு கொண்டுசெல்ல இப்போது நீதி அமைச்சும் நானும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 

எனினும் மரணதண்டனை நிறைவேற்றம் பற்றி பேசும் போது மனித உரிமை அமைப்புகள் அதற்கு தடையாக அமைகின்றது. அவர்கள் தலையிட்டு குற்றவாளிகளை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டினை சரியாக வழிநடத்த சமூக்கதை ஒழுக்கமாக மாற்ற நாம் எடுக்கும் முயற்சிகளின் போது அவற்றை குழப்புவதே மனித உரிமைகள் அமைப்புகளின் வேலையாக மாறியுள்ளது. 

வெலிக்கடை சிறையில் உள்ள பாரிய போதைப்பொருள் குற்றவாளிகளை அங்குணகொலபலச சிறைக்கு மாற்றி அங்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு செலுத்தியபோது எமது நாட்டில் நான் நியமித்த மனித உரிமைகள் அமைப்பே அதனை எதிர்த்து கேள்வி கேட்கும் நிலைமை உருவாகியுள்ளது. 

எம்மை பாதுகாக்க வேண்டிய, எமக்காக குரல் கொடுக்க வேண்டிய மனித உரிமை அமைப்பே எம்மை எதிர்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது சமூகம் நாசமாவது, நாடு நாசமாவது இவர்களுக்கு விளங்கவில்லை. குற்றவாளிகளை தண்டிப்பதே இவர்களுக்கு பிரச்சினையாக உள்ளது. மரண தண்டனையை நிறைவேற்ற எமது மனித உரிமை அமைப்புகள் தடையாக உள்ளது. எவ்வாறு இருப்பினும் நாட்டினை நாசமாக்கும் குற்றவாளிகளை காப்பாற்ற யார் முன்வந்தாலும், மரண தண்டனைக்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும் இந்த பாரிய போதைப்பொருள் குற்றவாளிகளை தண்டிப்பதில் நான் எடுத்துள்ள தீர்மானத்தை மாற்றிகொள்ளப்போவதில்லை. இரண்டு மாதங்களில் மரண தண்டனை கைதிகளை தண்டித்தே தீருவேன். இரண்டு மாதங்களில் மரண தண்டனை சட்டம் நடைமுறைக்கு வரும். 

அதேபோல் நீதியரசர் பதவி உயர்வு விடயத்தில் இன்று அரசியல் அமைப்பு பேரவை தடையாக உள்ளது. 12 நீதியரசர் பதவி உயர்வை அரசியல் அமைப்பு பேரவை நிராகரித்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை எனக்கோ பிரதம நீதியரசருக்கோ அறிவிக்கவில்லை. நீதியரசர் பதவியுயர்வு நிராகரிக்கப்படுகின்றது என்றால் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து கடிதம் மூலமாக அரசியலமைப்பு சபை அறிவிக்க வேண்டும். நீதியரசர் பதவி உயர்வு விடயத்தில் பக்கசார்பாக செயற்படக்கூடாது. இவ்வாறு பதவியுயர்வு நியமனம் நிராகரிக்கப்படுகின்ற காரணத்தினால் அவர்கள் மன உளைச்சலையும் சிரமங்களையும் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. இவர்களை நிராகரிக்க கடந்த கால சில செயற்பாடுகள் காரணம் என எனக்கு அறிய முடிந்தது. ஆனால் நீதி செயற்பாடுகளில் அவ்வாறான அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது. 

மேலும் நான் சற்று முன்னர் சபைக்கு வந்த வேளையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சில கேள்விகளை எழுப்பினார். என்னையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் கொலைசெய்ய முயற்சித்த சூழ்ச்சியை ஏன் ஜனாதிபதி கண்டறியவில்லை எனவும் எனது அதிகாரத்தின் கீழ் பொலிஸ் உள்ள  காரணத்தினால் ஏன் கண்டறிய முடியவில்லை என கேட்டார். 

எனது அதிகாரத்தின் கீழ் பொலிஸ் பிரிவு வந்த பின்னர் இந்த விசாரணைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த விசாரணை நடவடிக்கைகளில் எனது வாக்குமூலம் மட்டுமே பெறப்படாது இருந்தது. எனினும் நான்கு நாட்களுக்கு முன்னர் எனது வாக்குமூலத்தை நான் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு வழங்கினேன். இந்த சூழ்ச்சியின் பின்னணி குறித்து இப்போது உண்மைகளை வெளிப்படுத்தும் இறுதிக்கட்ட விசாரணைகளில் அவர்கள் உள்ளனர். அடுத்த இரண்டு வார காலத்தில் இது குறித்த அறிக்கையை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சட்டமா அதிபருக்கு வழங்குவார்கள். அதன் பின்னர் உண்மைகள் அம்பலமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.