(நா.தினுஷா)

புதிய அரசியல் அமைப்பிற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அனைவரும் தனது ஒத்துழைப்பினை பெற்றுகொடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருனா இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை விருப்பு மற்றும் மக்கள் ஆகியவற்றை நிச்சியமாக பெற்றுக்கொள்ள வேண்டும். 

ஆனால் புதிய அரசியல் அமைப்பு குறித்து நிபுணர்களின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ள எந்த பரிந்துரைகளை ஏற்றுகொள்ள வேண்டும் ஏற்றுகொள்ள கூடாது என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

அரசியல் அமைப்புக்கான சட்டமூலம் இன்னும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கபடாமல் உள்ள நிலையில் அதற்கான கலந்துரையாடல்களையும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.

அரசியல் அமைப்பை மையமாக கொண்டு மக்களிடையில் அச்சத்தை ஏற்படுத்தாமல் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் எமக்கான அரசியல் அமைப்பிற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு கலந்துரையாடல்களுக்கு ஒத்துழைப்பை பெற்றுகொடுப்பதுடன் அதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை வழங்கவும் முன்வர வேண்டும்.

தனித்து ஐக்கிய தேசிய கட்சியினால் அரசியல் அமைப்பினை உருவாக்க முடியாது. ஒருதரப்பினர் மாத்திரம் தனியாக அரசியல் அமைப்பினை உருவாக்குவதென்பது அது ஜனநாயக அரசாங்கத்துக்கு சாதகமாகவும் அமையாது. எனவே அரசியல் அமைப்புக்கான ஆதரவினை சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் பெற்றுகொடுக்க வேண்டும் என்றார்.