(செய்திப்பிரிவு)

எதிர்காலத்தில் நடைப்பெறவுள்ள 'யோவுன்புரய 2019' நிகழ்வின் ஏற்பாடு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் நேற்று புதன்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய ஏற்பாடுசெய்யப்பட்ட 'யோவுன்புரய' நிகழ்சி திட்டம் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் வீரவில தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபையின் பண்ணை வளாகத்தில் நடைப்பெறவுள்ளது.  

தேசிய கொள்கை, பொருளாதார விவகாரம்,மீள் குடியேற்றல் மற்றும் புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி , தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு,  தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் இயக்கங்கள் இணைந்து ' யோவுன்புரய' நிகழ்சியினை ஏற்பாடுச் செய்துள்ளது. 

தேசிய இளைஞர் சேவையின் தலைவர் சட்டத்தரணி எரந்த வெலிஹங்கே உள்ளடங்கலாக முப்படைகள் , பொலிஸ் , அரச நிறுவணங்களின் தலைவர்களும் கலந்துக்கொண்டார்கள். 

யோவுன்புர நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் இலங்கை இளைஞர் யுவதிகளிடையே தேசிய நல்லிணக்கம் தொடர்பாக அறிவூட்டல் மற்றும் கருத்துபரிமாறல்,  இளைஞர் அபிவிருத்தி தொடர்பாக வெளிநாட்டு இளைஞர் யுவதிகளுடன் கருத்துப்பரிமாறலில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்கல், இளைஞர் யுவதிகளிடையே புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு கல்வி, விளையாட்டு, கலாச்சார செயற்பாடுகளை முன்னெடுத்தல், அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் இளைஞர் யுவதிகளிடையே கலந்துரையாடல்களை முன்னெடுத்து யோசனைகளை முன்மொழிதல், போதைக்கு அடிமையாகாத இளந் தலைமுறையினை உருவாக்கல் என்பனவாகும்.