அமெரிக்கா மத்தியக் கிழக்கு நாடுகளின் சர்வாதிகாரிகளையும், தீவிரவாதிகளையும் ஆதரிக்கிறது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன்று ஆற்றிய உரையில், ''இராக்கில் அமெரிக்க இராணுவத்தளம் இருப்பது அவசியம். அப்போதுதான் ஈரானின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும். ஈரான் மிகவும் ஆபத்தானது'' என்றார்.

இதற்கு தற்போது ஈரான் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிப் தனது ட்விட்டர் பக்க்த்தில் தெரிவித்துள்ளதாவது,

 ''மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்க சர்வாதிகாரிகளையும், தீவிரவாதிகளையும் ஆதரிக்கிறது. அமெரிக்காவை ஆதரிக்கும் அவர்கள்தான் நமது பிராந்தியத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும்,அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். 

இதனைத் தொடர்ந்து ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.

ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.