கிறிஸ்தவ மதகுருமார் கன்னியாஸ்திரிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார்கள்  என தெரிவித்துள்ள பரிசுத்த பாப்பரசர் சில சந்தர்ப்பங்களில் அவர்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தை மேற்கொண்டுள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் செய்தியாளர்களிற்கு இதனை தெரிவித்துள்ளார்.

அருட்சகோதரிகள் குழுவொன்றை மதகுருமார் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தை தொடர்ந்து முன்னைய பாப்பரசர் பெனடிக்ட் கன்னியாஸ்திரிகள் சபையொன்றை கலைத்தார் எனவும் பரிசுத்த பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்கின்றது இதற்கு தீர்வை காண முயல்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்

மதகுருமாரும் ஆயர்களும் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டமை எங்களிற்கு தெரியும் நாங்கள் இதற்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய பாப்பரசரிற்கு கன்னியாஸ்திரிகள் குழுவொன்றை கலைப்பதற்கான துணிச்சல் இருந்தது என தெரிவித்துள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குறிப்பிட்ட கன்னியாஸ்திரிகள் குழுவினர் அடிமைகளாக்கப்பட்ட நிலையில் இருந்தனர்  என தெரிவித்துள்ளதுடன் பாலியல் அடிமைகளாக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் காணப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரான்சிலேயே இது இடம்பெற்றது என பாப்பரசர் குறிப்பிட்டுள்ளார்