காட்டு யானைகளினால் ஏற்படும் பாதிப்புக்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு யானை வெடிகளுக்கு மாறாக “மிளகாய்த் தூளை” பாவிக்கும் முறைமை வெற்றியளித்து வருவதாக பதுளை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பதுளை மாவட்டத்தின் மகியங்கனை தேர்தல் தொகுதியின் விவசாயிகள் மற்றும் மகாவலி “சி” பிரிவு விவசாயிகள் காட்டு யானைகளினால் ஏற்பட்டு வரும் பல்வேறு பாதிப்புக்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு “மிளகாய் தூள்” பாவிக்கும் முறைமையை பரீட்சார்த்த முறையில் மேற்கொண்டு வெற்றியைக் கண்டுள்ளனர்.

“மிளகாய்த் தூள்” பாவனையை பெரியளவில் மேற்கொள்ள முடியாவிட்டாலும் கூட வீட்டுத் தோட்டப்பயிர்ச்செய்கை தென்னை,வாழைப்பயிர்ச்செய்கை,வீடுகள் மற்றும் சேமிப்பு நெல், குரக்கன் ,சோளம் ஆகியவற்றின் மூட்டைகள் ஆகியவற்றை காட்டு யானைகளினால் பாதுகாப்பது உள்ளிட்டு மனித உயிர்களை காட்டு யானைகளினால் பாதுகாப்பது போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள முடியுமென்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

“மிளகாய்த் தூள்” பாவனையை பெரியளவில் மேற்கொள்ள பொருளாதார நிலை பெரும் தடையாக இருப்பதாகவும், விவசாயிகள் மேலும் கூறினர்.

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் பிரவேசிக்கும் வழிகள் பலவற்றில் யானை உயரத்திற்கு ஏற்பமரக்கிளைகளில் மிளகாய்த் தூளை கொட்டும் நிலையில் வைத்தல் மற்றும் கம்பிகளைக் கட்டி அக்கம்பிகளில் மிளகாய்த் தூள் சிறு பொதிகளை தொங்கவிடுதல் வேண்டும். 

யானைகள் அவ் வழிகளில் பிரவேசிக்கும் போது  கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் மிளகாய்த்தூள் சிறுபொதிகளில் உள்ள மிளகாய்த்தூள் சிதரும் போது அம்மிளகாய்த்தூள் யானைகளின் கண்களில் பட்டதும் யானைகள் வந்த வழியாகவே கத்திக்கொண்டு திரும்பி ஓடி விடுகின்றன. 

இதனை பரீட்சார்த்த ரீதியில் மேற்கொண்டு வெற்றியும் கண்டுள்ளோமென்று விவசாயிகள் பலரும் கருத்துக்களை தெரிவித்தனர்.