துரிதமாக மாற்றம் கண்டு வரும் நவீன உலகிற்கு ஏற்றவாறு கல்வி கட்டமைப்பை மாற்றியமைப்பதற்காக மக்கள் பிரதிலாபங்களுடன் கூடிய  பல அபிவிருத்தி  துறை சார்ந்த அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பித்த போதும் தேசிய அரசாங்கம் நிலவிய  காலப்பகுதியில்  இருந்த ஒரு சிலர் அதற்கு முட்டுகட்டையாக இருந்து எமக்கு இடையூறு விளைவித்ததாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

அமைச்சரவை பத்திரங்களுக்கு இடையூறு விளைவித்ததை போன்று நாட்டின் அபிவிருத்திக்காக முன்வைக்கப்பட்ட பாரியளவிலான அபிவிருத்தி செயற்திட்டங்களை திட்டமிட்டப்படி முடிப்பதற்கு குறித்த நபர்கள் இடையூறு விளைவித்தமையினால் எதிர்பார்த்த அபிவிருத்தி இலக்குகளை நோக்கி பயணிப்பதற்கு எமக்கு சிரமம் ஏற்பட்டது.

எந்த தடை ஏற்பட்டாலும் கல்வி கட்டமைப்பில் மக்கள் உணர்ந்து கொள்ள கூடிய பல மாற்றங்களை செய்ய முடிந்தது. எனினும் அந்த மாற்றங்கள் கூட எதிர்பார்த்த மட்டத்தில் அரைவாசிக்கும் குறைவாகும் எனவும் குறிப்பிட்டார்.