பட்டிருப்பு மற்றும் நிந்தவூர் பகுதிகளிலிருந்து பதுளைக்கு ஹெரோயின் போதை பொருளை கொண்டு வந்த இருவரை பதுளைப் பொலிஸார் ரிதிபானை என்ற இடத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் பலியக்காரவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றினையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் ரிதிபானை என்ற இடத்தில் நவீன மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த இருவரை தடுத்து நிறுத்தினர். 

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை சோதனைக்குட்படுத்திய வேளையில் ஒன்பது கிராமும் 925 மில்லிகிராமும் எடையுள்ள ஹெரோயின் போதைவஸ்துகள் அடங்கிய சிறு பக்கட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

 அத்துடன் குறிப்பிட்ட இருவரைக் கைதுசெய்துள்ளதோடு நவீன மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாரினால் மீட்கப்பட்ட ஹெரோயின் போதைவஸ்துக்களின் பெறுமதி எட்டரை இலட்சம் ரூபாவென தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர்  பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.