முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள விவகாரம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தது. அந்த பேச்சுவார்த்தையின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய அரசாங்கம், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் முதலாளிமார் சம்மேளனத்திற்கிடையிலான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. 

அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன், பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், வீ.இராதா கிருஷ்ணன் மற்றும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களாக திலகராஜ், அரவிந்த குமார் மற்றும் முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். 

இந்த பேச்சுவார்த்தைக்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு உத்தியோக பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் குறித்த தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்ரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகியவற்றின் பிரதிநிதிகள் தாம் இதற்கு ஆதரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.