(நா.தனுஜா)

அரசியல், பொருளாதாரம் என அனைத்து அடிப்படைகளிலும் சுதந்திரம் பெற்றிருப்பதே முழுமையான சுதந்திரத்தின் அடையாளமாகும். அவ்வாறிருக்கையில் இன்றளவில் சிறுபான்மையின மக்கள் அரசியல் ரீதியான உரிமைகளை பெறுவதிலிருந்து தூரப்படுத்தப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியில் தூரப்படுத்தப்பட்டுள்ளனர். அதனால் முழுமையான சுதந்திர உணர்வை அனுபவிப்பதிலிருந்தும் தூரப்படுத்தப்பட்டுள்ளனர் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் விவகாரம், வடகிழக்கு காணி விடுவிப்பு சிக்கல்நிலை, பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளில் தீர்வினைக்கோரி போராடிவரும் அருட்தந்தை சக்திவேலிடம் இவ்வருட சுதந்திர தினம் குறித்த அபிப்பிராயத்தை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இந்த 71 ஆவது சுதந்திர தினமென்பது அரசியல்வாதிகளுக்கும், கட்சிகளுக்குமானதாகவே அமைந்திருக்கின்றது. சுதந்திர தினமென்பது இன்னமும் பொதுமக்களுக்கு சொந்தமானதாக மாற்றமடையவில்லை. 1948ஆம் ஆண்டில் எம்முடைய நாடு பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து சுதந்திரமடைந்ததாகக் கூறப்பட்டாலும், இன்றளவிலே நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அல்லது தேசிய சொத்துக்கள் சீனா, இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சொந்தமானவையாகவே உள்ளன. நாட்டில் யார் ஆட்சியதிகாரத்தில் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கின்ற சக்திகளாக இந்த நாடுகளே இருக்கின்றன எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.